UPDATED : அக் 11, 2026 06:48 PM
ADDED : அக் 11, 2026 06:16 PM

அ நிறம் | அளவு
வேளச்சேரி: வேளச்சேரி அருகே சாலையில், திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வேளச்சேரி, தண்டீஸ்வரம் நகரைச் சேர்ந்தவர் கவின், 26; கார் ஓட்டுநர். இவர், நேற்று அதிகாலை, ‛போர்டு ஐகான்‛ காரில் நண்பர்களுடன், வேளச்சேரி பிரதான சாலை நோக்கி புறப்பட்டார். கங்கையம்மன் நகர் அருகில் சென்றபோது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. சுதாரித்த கவின், நண்பர்களுடன் காரில் இருந்து இறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் கார் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தகவலறிந்து வந்த வேளச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுதும் எரிந்து நாசமானது. விபத்திற்கான காரணம் குறித்து, வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
