சென்ட்ரல் - அரக்கோணம்
மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னை, ஜன. 25-
சென்னையின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக உள்ள ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் தடத்தில், மின்சார ரயில்கள் நேற்று வழக்கம் போல் ஓடின.
இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில், பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையம் அருகில், நேற்று காலை 7:00 மணியளவில், திடீர் சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே தொழில்நுட்ப பணியாளர்கள், அங்குள்ள சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து திருவள்ளூர், ஆவடியில் இருந்து சென்ட்ரலுக்கு வரவேண்டிய மின்சார ரயில்கள், ஆங்காங்கே வரிசையாக நிறுத்தப்பட்டன. இதனால் அரக்கோணம் - சென்ட்ரல் தடத்தில், 45 நிமிடங்கள் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பயணியர் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து ரயில் நிலையங்களில், எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
காரணம் என்னவென்று தெரியாமல் ஆவடி, வில்லிவாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில், பயணியர் காத்திருந்தனர்.
இந்த தடத்தில் காலை 7:45 மணிக்குப் பிறகே, மின்சார ரயில்கள் வழக்கம் போல் ஓடின.