/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மத்திய அரசின் ஓ.என்.டி.சி., செயலி பெங்களூரில் வெகு பிரபலம்
/
மத்திய அரசின் ஓ.என்.டி.சி., செயலி பெங்களூரில் வெகு பிரபலம்
மத்திய அரசின் ஓ.என்.டி.சி., செயலி பெங்களூரில் வெகு பிரபலம்
மத்திய அரசின் ஓ.என்.டி.சி., செயலி பெங்களூரில் வெகு பிரபலம்
ADDED : மார் 06, 2024 12:20 AM
சென்னையை போலவே, பெங்களூரில் 'ஓலா, ஊபர்' போன்ற தனியார் நிறுவனங்களின் மொபைல் செயலி வாயிலாக ஆட்டோ, டாக்சி பயன்படுத்தும் முறை பழக்கத்தில் உள்ளது. குறிப்பிட்ட கமிஷனை, ஓட்டுனர்களிடம் இருந்து, அந்த நிறுவனங்கள் பெற்று கொள்கின்றன.
இந்நிறுவனங்களின் மொபைல் செயலியில் வாடகை கட்டணம் செலுத்தினால், கமிஷன் பிடித்தம் செய்த பின் தான், ஓட்டுனர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அத்துடன் பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் பலமுறை போராட்டங்களும் நடத்தினர்.
மத்திய அரசின், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாடு துறையின் கீழ், ஓ.என்.டி.சி., என்ற, பொது இணையதள செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை, பெங்களூரில், 'ஜஸ்பே' தொழில்நுட்ப பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
இந்த இணையதளம், பொருட்களை விற்போர், வாங்குவோருக்கு இடையே கமிஷன் ஏதுமின்றி, இருதரப்பினரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதில், ஆட்டோ, கார் போன்ற வாடகை வாகனங்களும் இணைந்து பயன்பெறும் வகையில், 'நம்ம யாத்ரி' என்ற மொபைல் செயலி, 2023 ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்பதிவு செய்யும் போது, செயலில் காண்பிக்கும் முழு தொகையும் ஓட்டுனருக்கே செல்லும். கமிஷன் பிடித்தம் செய்யப்படாது.
இந்த செயலியை பெங்களூர்வாசிகள் முழுமையாக பயன்படுத்துகின்றனர். வாடகை வாகனங்களை இயக்குவோரும், இதை பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பெங்களூரில் இந்த செயலி பிரபலமாக உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஓ.என்.டி.சி., இணையதள வர்த்தக திட்டம், நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் இடையே பிரபலமடைந்து, அதிக வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்பட்டு வந்தாலும், தமிழகத்தில் இது தொடர்பான விழிப்புணர்வோ, புரிதலோ இல்லாதது வியப்பளிப்பதாக, பெங்களூரு வாடகை வாகன ஓட்டுனர் தெரிவித்தனர்.

