கள்ள நோட்டு கும்பல் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
கள்ள நோட்டு கும்பல் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
UPDATED : அக் 14, 2026 09:47 PM
ADDED : அக் 14, 2026 09:44 PM
சென்னை: திருவல்லிக்கேணியில் சிக்கிய கள்ள நோட்டு கும்பல் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
திருவல்லிக்கேணியில் தனியார் விடுதி ஒன்றில், கடந்த ஜூலை 15ல், திருவல்லிக்கேணி போலீசார் சோதனை நடத்தினர்.
மலேஷியாவில் இருந்து கள்ள நோட்டுகளை கடத்தி வந்து, சென்னையில் புழக்கத்தில் விட்ட தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ரவிசந்திரன், 41, ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த சையது அப்துல் ரஹ்மான், 39, அண்ணா சாலை சபீக் ரஹ்மான், 37, கர்நாடக மாநிலம், பெங்களூரு சீனிவாசன், 48, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து, 22.21 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள், நம் நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைக்க முயன்றதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அவர்கள், 44 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும், குற்றத்திற்கு பயன்படுத்திய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், முதல் நபர் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து, 90 நாட்களுக்குள், சென்னை எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நேற்று, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
