/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை - அந்தமான் 'ஸ்பைஸ்ஜெட்' விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
சென்னை - அந்தமான் 'ஸ்பைஸ்ஜெட்' விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை - அந்தமான் 'ஸ்பைஸ்ஜெட்' விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை - அந்தமான் 'ஸ்பைஸ்ஜெட்' விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 21, 2024 02:36 AM
சென்னை:சென்னையில் இருந்து அந்தமான் செல்லும், ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் பயணியர் விமானத்திற்கு, 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் சோதனையில், மிரட்டல் புரளி என்று தெரியவந்தது.
அந்தமானில் இருந்து, ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று மதியம், 1:00 மணியளவில், சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானம், மாலை, 3:00 மணிக்கு அந்தமான் செல்ல புறப்பட தயாராக இருந்தது.
இந்நிலையில், மதியம் 2:30 மணிக்கு, சென்னையில் உள்ள, ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவன, மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு, மர்ம நபர்கள், 'இ-மெயில்' அனுப்பினர்.
அதில், 'அந்தமான், புனே, டில்லி, மும்பை மற்றும் கோவா செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் பயணியர் விமானங்களுக்கு வெடிகுண்டு வைத்துள்ளோம்' என, மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
உடனே இந்த தகவல், சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட தயராக இருந்த, ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணியரை ஏற்றாமல், விமானம் தாமதமாக புறப்படும் என, அறிவிக்கப்பட்டது.
அந்த விமானத்தில் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
விமான ஓடுபாதை, பயணியர் தங்கும் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டது. ஆனால், மர்ம பொருட்கள் ஏதும் சிக்காததால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என, விமான நிலைய அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட விமானம் பறப்பதற்கு, விமான பாதுகாப்பு துறை அனுமதி அளித்தது. அதன் பின், 99 பயணியருடன், ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் மாலை, 4:20 மணிக்கு, சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சென்னை விமான நிலையத்திற்கு, ஜூன் முதல் நேற்று வரை, 14 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.