ADDED : ஆக 26, 2011 01:35 AM
சென்னை : பெண்ணிடம் ஏ.டி.எம்., கார்டை திருடி, 1 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அம்பத்தூர் அடுத்த, அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சலீமுல்லாகான்; வெளிநாட்டில் பணியாற்றுகிறார். இவரது மனைவி ரிஸ்வானா பேகம், 42. இவரது வீட்டருகில், பேன்சி கடை நடத்தி வருபவர் பூபாலன். இவரது மனைவி அனுசுயா. ரிஸ்வானாவிற்கு வலிப்பு நோய் இருந்த காரணத்தினால் பூபாலனும், அனுசுயாவும் அவருக்கு உதவியாக இருந்தனர். ரிஸ்வானாவின் சுகவீனத்தை பயன்படுத்திக்கொண்ட பூபாலன், அவரது ஏ.டி.எம்., கார்டை திருடி, அதிலிருந்து, 1 லட்சம் ரூபாய் பணமும், வீட்டில் இருந்த மூன்று மோதிரங்கள், ஒரு தங்க டாலர் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக, திருமுல்லைவாயில் போலீசில் ரிஸ்வானா புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சம்பவத்தில் ஈடுபட்ட பூபாலன் - அனுசுயா தம்பதியினரை கைது செய்தனர்.