/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயிலுக்காக மேம்பாலம் அமைக்கும் பணிகள் "விறு விறு'
/
மெட்ரோ ரயிலுக்காக மேம்பாலம் அமைக்கும் பணிகள் "விறு விறு'
மெட்ரோ ரயிலுக்காக மேம்பாலம் அமைக்கும் பணிகள் "விறு விறு'
மெட்ரோ ரயிலுக்காக மேம்பாலம் அமைக்கும் பணிகள் "விறு விறு'
UPDATED : செப் 21, 2011 06:08 AM
ADDED : செப் 21, 2011 01:22 AM
திருமங்கலம் - பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் பாதையில், மேம்பாலம் அமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடக்கிறது.
அதே நேரத்தில், கோயம்பேடு மார்க்கெட் சாலையில், மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கான பில்லர்கள் அமைக்கும் பணி மந்தமாகியுள்ள நிலையில், மார்க்கெட்டிற்குள் செல்ல வழியில்லாமல் வியாபாரிகள் தவிக்கின்றனர். வண்ணாரப்பேட்டை - விமான நிலையம், சென்ட்ரல் - பரங்கிமலை என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடக்கின்றன. முதல் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை சுரங்க பாதையாகவும், சைதாப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை மேம்பாலத்திலும் பணிகள் நடக்கின்றன.
இரண்டாவது வழித்தடத்தில், சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரையும் சுரங்க ரயில் பாதையாகவும், அங்கிருந்து பரங்கிமலை வரை மேம்பாலத்தில் செல்லும் வகையிலும் பணிகள் நடக்கின்றன. சுரங்க ரயில் பாதைக்காக, மண் பரிசோதனை பணி நடக்கிறது. நேரு பூங்கா, மேதின பூங்கா உட்பட சில இடங்களில் பணிகள் முடிந்து, சுரங்க ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கிவிட்டன.
தூண்கள் அமைக்கும் பணி வேகம்: மேம்பாலம் ரயில் பாதைக்காக, தூண்கள் அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. திருமங்கலத்தில் இருந்து பரங்கிமலை வரை, கோயம்பேடு, அசோக்நகர், கே.கே.நகர், ஈக்காட்டுதாங்கல் வழியாக, 527 தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, 207 தூண்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 97 தூண்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, சுரங்க பாதை மற்றும் மேம்பால ரயில் பாதை அமைக்கும் பணிகள், ஒரே நேரத்தில் நடக்கின்றன. மேம்பாலத்திற்காக, தூண்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கின்றன. தூண்கள் அமைத்த பின்னர், அவற்றை இணைத்து அதன் பின்னர், ரயில் தண்டவாளம் பொருத்தும் பணி நடைபெறும்'' என்றார்.
கோயம்பேட்டில் மந்தம்: அதே நேரத்தில், கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டின் எதிர்புறம் பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டியும் உயர்த்தப்பட்ட சாலையில், இரண்டு ரயில் நிலையங்கள் அமையவுள்ளது. இந்த இரண்டு ரயில் நிலையங்களையும் இணைக்கும் வகையில், ரயில் செல்லும் மேம்பால பாதை அமைக்கப்படுகிறது. இப்பாலத்திற்கான பில்லர்கள் அமைக்கும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இதற்காக, கோயம்பேடு மாநகர பஸ் நிலையத்தில் துவங்கி, புறநகர் பஸ்கள் வந்து செல்லும் வழியாக, மார்க்கெட் சாலையை கடந்து ரயில் செல்லும் பாதை அமைக்கப்படுகிறது. இந்த வழித் தடத்தில் மொத்தம் 45 பில்லர்கள் அமையவுள்ளன.
ரயில் செல்லும் பாதைக்காக, பில்லர்கள் அமைக்கும் பணி ஒரு மாதகாலமாக மந்தமாக செல்கிறது. குறிப்பாக, கோயம்பேடு போலீஸ் நிலையத்தையொட்டி செல்லும் மார்க்கெட் சாலையில், எப்போதும் வாகனங்களின் போக்குவரத்து அதிகம் இருக்கும். இதே சாலையில் ஆம்னி பஸ் நிலையமும் அமைந்துள்ளது. அங்கும் தினமும் 600க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும் நிலையில், இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக ஒரு வழிப்பாதையாக்கப்பட்ட இந்த சாலை படுமோசமாக இருப்பதால், மார்க்கெட்டிற்குள் செல்பவர்கள் பூ மார்க்கெட் முன்பு உள்ள காலி நிலப்பகுதியில் திடீர் குறுக்கு பாதை அமைத்து சென்று வந்தனர். தற்போது பெய்த மழையால், இந்த வழியும் குளமாக மாறிவிட்டது.
சுரங்கப்பாதை மூடல் : சைதாப்பேட்டையில் சுரங்க ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்காக, பஸ் நிலையம் அருகில் சுரங்க ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கிவிட்டன. ரயில் நிலையம் அமைப்பதற்கு முன்பாக, பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணி தற்போது நடக்கிறது. தொடர்ந்து பணிகள் நடப்பதற்கு வசதியாக, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் இருந்த சுரங்கப் பாதை மூடப்பட்டுள்ளது. இதனால், சைதாப்பேட்டை ரயில் நிலையம் பகுதியில் இருந்து வருபவர்கள், எதிர்புறம் செல்ல வழியில்லாமல் அவதிப்படுகின்றனர்.
பஸ் நிலையம் மாற்றம் : சைதாப்பேட்டை பஸ் நிலையம் அருகில், சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்காக, பஸ் நிலையத்திற்கு முன்பாக, தாடாண்டர் நகர் நுழைவு பகுதியில் இருந்த குடிசைகள் சமீபத்தில் அகற்றப்பட்டன. இந்த நிலையில், ரயில் நிலையப் பணிக்காக, பஸ் நிலையத்தின் முன்பகுதி மட்டும், மாற்றப்படவுள்ளது. இதற்காக, இளங்காளி அம்மன் கோவில் அருகில், தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி முடிந்ததும், பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் பஸ்களில் பெரும்பாலானவை, இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தப்படவுள்ளது.