சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை திட்டம் 16 மணி நேர பணி அனுமதி கேட்டு ஆணையம் காத்திருப்பு
சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை திட்டம் 16 மணி நேர பணி அனுமதி கேட்டு ஆணையம் காத்திருப்பு
ADDED : மார் 11, 2026 05:47 AM

சென்னை: சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால கட்டுமான பணிக்கு, 16 மணி நேரம் அனுமதி கேட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறது.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே, 20.9 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணிக்கு, 2009ல் அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தி.மு.க., அரசு, 2021ம் ஆண்டு பொறுப்பேற்றதும், இந்த மேம்பால பணியை மீண்டும் துவங்க வலியுறுத்தியதை அடுத்து, மத்திய அரசு இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட முன் வந்தது.
கடந்த 2022ல், தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன், இப்பணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. மும்பையை சேர்ந்த ஜெ.குமார் என்ற கட்டுமான நிறுவனம் வாயிலாக, இரண்டடுக்கு மேம்பால பணிகள் நடந்து வருகின்றன.
பகலில் ஐந்து மணி நேரம், இரவில் ஆறு மணி நேரம் என நாள்தோறும், 11 மணி நேரம் பணிகளை மேற்கொள்ள, போக்குவரத்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதனால், கட்டுமான பணிகள் தாமதமாகி வருகின்றன.
எனவே, நாள்தோறும் 16 மணி நேரம் பணி செய்ய அனுமதி வேண்டும் என, தமிழக அரசிடம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கேட்டுள்ளது.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய, சென்னை மண்டல அலுவலர் வீரேந்திர சாம்பியால், திட்ட அதிகாரி சிவம் சர்மா ஆகியோர் கூறியதாவது:
இந்த மேம்பாலம் மதுரவாயல் முதல் கோயம்பேடு வரை ஓரடுக்காகவும், அதன்பின் சென்னை துறைமுகம் வரை இரண்டடுக்காகவும் அமையவுள்ளது. கீழ் அடுக்கின் அகலம் 26 மீட்டராகவும், மேலடுக்கின் அகலம் 23 மீட்டராகவும் இருக்கும். கோயம்பேட்டில் இருந்து உள்ளூர் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படும். நேப்பியர் பாலத்திற்கு முன், அந்த வாகனங்கள் இறங்கிவிட வேண்டும். துறைமுகத்திற்குள், ஆறு வழியில் மேம்பாலம் இறங்கும் வகையில் சாலை அமைக்கப்படும்.
இந்த இரண்டடுக்கு மேம்பாலம், 16 சாலை மேம்பாலங்கள், சிந்தாதிரிபேட்டை மற்றும் சூளைமே டு ஆகிய இடங்களில், இரண்டு ரயில்வே பாலங்களை கடந்து பயணிக்கும். திட்ட மதிப்பீட்டு தொகை 3,570 கோடி ரூபாய் ஆகும் .
இதில், 1 கி.மீ., மேம்பாலம் கட்ட, 170 கோடி ரூபாய் செலவாகிறது. கடந்த 2011ம் ஆண்டு வரை மேம்பாலம் கட்டும் பணிக்கு, 114 துாண்கள் அமைக்கப்பட்டன.
அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியுமா என, ஆறு கட்டமாக ஆய்வு நடந்துள்ளது. அதில், 12 துாண்களை பயன்படுத்த முடியாது என தெரியவந்ததால், அவற்றை இடித்து அகற்றம் பணிகள் நடந்து வருகின்றன.
துாண்களின் மேல், முன்வார்ப்பு செய்யப்பட்ட கான்கிரீட் ஓடுபாதை கட்டமைப்புகள் பொருத்தும் பணிகள், 15 நாட்களில் துவக்கப்படும். இதற்காக, 9,500 முன்வார்ப்பு கான்கிரீட் கட்டமைப்புகள் பயன்படுத்தப்பட உள்ளன.
செம்பரம்பாக்கத்தில் உள்ள பணிமனையில், 800 முன்வார்ப்பு கட்டமைப்புகள் தயாராக உள்ளன. தற்போது, 20 சதவீதம் மேம்பால பணிகளும், 65 சதவீதம் துாண்கள் அமைக்கும் பணிகளும் முடிந்துள்ளன. இந்த மேம்பாலத்தை, 2027 நவம்பரில் போக்குவரத்துக்கு திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க தினமும் குறைந்தபட்சம் 16 மணி நேரம் தேவை.
இதுகுறித்து தலைமை செயலர் முருகானந்தம், நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோரிடம் பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
