/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் தடை புகார்களில் சென்னைக்கு முதலிடம்
/
மின் தடை புகார்களில் சென்னைக்கு முதலிடம்
ADDED : ஜூன் 10, 2025 12:27 AM
சென்னை, வெயில் குறைந்துள்ளதால், மின் தேவையை விட, அதிக மின்சாரம் கிடைக்கிறது. இருப்பினும், மின் சாதன பழுதால் மின் தடை அதிகரிக்கிறது. மாநிலம் முழுதும் மின் தடை தொடர்பாக பெறப்படும் புகார்களில், சென்னை முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக, வட சென்னையில் இருந்து அதிக புகார்கள் வருகின்றன.
மழை, புயலின்போது மின்கம்பங்கள் சாய்ந்து, மின் கம்பி அறுந்து விழுவதால், மின் தடை ஏற்படுகிறது. இந்த பிரச்னை, தரைக்கு அடியில் கேபிளில் மின் வினியோகம் செய்யும் பகுதிகளில், அடிக்கடி ஏற்படுவதில்லை. சென்னையில் தரைக்கு அடியில் கேபிள் வாயிலாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, வெயில் தாக்கம் குறைவாக இருப்பதால், மின் தேவையும் சராசரியாக, 16,000 - 17,000 மெகா வாட் அளவிலேயே உள்ளது. அதை விட, அதிக மின்சாரம் கிடைக்கிறது. இருப்பினும் சமீப காலமாக, மின் சாதன பழுதால் மாநிலம் முழுதும் பல இடங்களில் மின் தடை ஏற்படுகிறது.
இதனால், சென்னை மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள மின்னகம் நுகர்வோர் சேவை மையத்திற்கு, அதிக புகார்கள் வருகின்றன. தினமும் சராசரியாக, 3,000 புகார்கள் வந்த நிலையில், தற்போது 4,000 புகார்கள் வருகின்றன. அதில், சென்னையில் மட்டும் 1,000 புகார்கள் வருகின்றன. சென்னையில் மின் தடை தொடர்பாக பெறப்படும் மொத்த புகார்களில் 90 சதவீதம் அயனாவரம், கொளத்துார், தண்டையார்பேட்டை, பெரம்பூர், ராயபுரம் உள்ளிட்ட வட சென்னைக்கு உட்பட பகுதிகளில் இருந்து தான் வருகின்றன.
இதுகுறித்து, மின் வாரிய பணியாளர்கள் கூறியதாவது:
வட சென்னையில் உள்ள பெரும்பாலான பில்லர் பாக்ஸ், டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டு, பல ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, குடியிருப்புகள் அதிகமாகி வருகின்றன. அதற்கு ஏற்ப, மின் சாதனங்களின் திறனை உயர்த்த வேண்டும்.
இதை செய்யாதததால் மின் சாதனங்களில், 'ஓவர் லோடு' காரணமாக பழுது ஏற்படுகிறது. பராமரிப்பு பணிக்கு தேவைப்படும் சாதனங்களையும் சரிவர வழங்குவதில்லை. இதுபோன்ற காரணங்களால், மின் தடை தொடர்கிறது.
வட சென்னை வளர்ச்சி திட்டத்தில், புதிய மின் சாதனங்கள் நிறுவுவது உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன. இவற்றை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***