/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவர்கள் போராட்டத்தால் பணிந்தது சென்னை பல்கலை
/
மாணவர்கள் போராட்டத்தால் பணிந்தது சென்னை பல்கலை
ADDED : பிப் 26, 2026 05:28 AM
சென்னை: சென்னை பல்கலை எம்.எஸ்.டபிள்யூ., மாணவ - மாணவியருக்கான களப்பணி தொகையை முழுதும் விடுவிக்க, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நுாற்றாண்டு பழமையான, சென்னை பல்கலையில், முதுநிலை சமூக பணிகள் எனும், 'எம்.எஸ்.டபிள்யூ' படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த படிப்புகளில் சேரும் மாணவ- மாணவியருக்கு, அரசு அல்லாத தன்னார்வ அமைப்புகள், சுகாதாரம் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அறிய ஓர் வாய்ப்பு கிடைக்கும்.
ஒவ்வொரு செமஸ்டரிலும் சில நாட்கள், கிராமங்கள் உட்பட பல பகுதிகளில், சமூக களப்பணி பயிற்சி மேற்கொள்வது அவசியம். இதற்காக, பல்கலை, மாணவ - மாணவியரிடம் இருந்து, ஆண்டுக்கு, 30,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கும்.
சென்னை பல்கலை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், வெறும் 30 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், மாணவ - மாணவியர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகின்றன. குறைந்த நிதியை வைத்து, அவர்களால் களப்பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனது.
இதுகுறித்து, கடந்த மாதம் 27ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது. மேலும், முதுநிலை சமூக பணிகள் துறை மாணவ - மாணவியரும், கடந்த 6ம் தேதி, சென்னை பல்கலை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். தற்போது, இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
இதுகுறித்து, உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நிதி பிரச்னை காரணமாக, மாணவ - மாணவியரின் களப்பணிக்கான தொகையை முழுதும் விடுவிக்க முடியாத நிலை இருந்தது. பிரச்னை அரசின் கவனத்துக்கு சென்றதை அடுத்து, தீர்வு காணப்பட்டுள்ளது.
களப்பணிக்கு 100 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவ - மாணவியர், களப்பணிகளை இனி எந்தவித பிரச்னையுமின்றி மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

