sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'ஸெனட்' கூடாததால் சென்னை பல்கலை பணிகள் பாதிப்பு! பட்டம் கிடைக்காமல் பறிபோகும் வேலை வாய்ப்பு

/

'ஸெனட்' கூடாததால் சென்னை பல்கலை பணிகள் பாதிப்பு! பட்டம் கிடைக்காமல் பறிபோகும் வேலை வாய்ப்பு

'ஸெனட்' கூடாததால் சென்னை பல்கலை பணிகள் பாதிப்பு! பட்டம் கிடைக்காமல் பறிபோகும் வேலை வாய்ப்பு

'ஸெனட்' கூடாததால் சென்னை பல்கலை பணிகள் பாதிப்பு! பட்டம் கிடைக்காமல் பறிபோகும் வேலை வாய்ப்பு

7


UPDATED : ஜன 19, 2026 07:10 AM

ADDED : ஜன 19, 2026 06:06 AM

Google News

UPDATED : ஜன 19, 2026 07:10 AM ADDED : ஜன 19, 2026 06:06 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை பல்கலையில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய 'ஸெனட்' கூட்டம், ஒன்பது மாதங்களாகியும் நடத்தப்படாததால், பல்கலையின் முக்கிய பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக, பேராசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். படிப்பை நிறைவு செய்தும் பட்ட சான்று கிடைக்காததால், மாணவர்கள் உயர்கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் மூத்த பல்கலையான சென்னை பல்கலையில் துணைவேந்தர் நியமிக்கப்படாததால், பல்வேறு சீர்கேடுகள் மற்றும் சிக்கல்களுக்கு தீர்வு காண முடியாத சூழல் உள்ளது. அதில் மிக முக்கியமானது, பல்கலையின் மேலவையான 'ஸெனட்' கூட்டத்தை, ஆண்டுக்கு இரு முறை கூட்ட வேண்டும் என்பது விதி.

அதன்படி, கடந்த செப்டம்பரில் கூட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்பது மாதங்களாக இன்னும் கூட்டப்படவில்லை. அதேபோல், ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில், சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, எந்த விதிகளையும் பின்பற்றாமல், கடமைக்காக சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படுகிறது. இதனால், முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க முடியாமல் பல்கலை தடுமாறுகிறது.

உரிய சான்றிதழ்


இதுகுறித்து, பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது: பல்கலையில் பாடத்திட்ட உருவாக்கம், ஆராய்ச்சி சார்ந்த அறிவுரைகள், உறுப்புக் கல்லுாரிகளுக்கான சட்ட திட்டங்கள் மற்றும் செயல் திட்டங்கள், தேர்வுகள் உள்ளிட்டவை குறித்த முக்கிய முடிவுகளை, ஸெனட் கூட்டத்தில் எடுக்க முடியும். அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுக்கும், அங்கே தான் ஒப்புதல் பெற முடியும்.

ஆனால், ஸெனட் கூட்டம் நடக்காததால், தேர்வுகளை நடத்துவது குறித்து, தேர்வு கட்டுப்பாட்டாளருக்கு வழிகாட்ட முடியவில்லை. மேலும், தேர்வு முடிந்ததும், முக்கால்வாசி பேருக்கு உரிய சான்றிதழ்களை வழங்க முடியவில்லை. இதனால், பட்டப்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்த பின்பும், பணிக்கு செல்லவோ, வெளிநாடுகளுக்குச் செல்லவோ முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர்.

முக்கியமாக, ஸெனட் உறுப்பினர்களில் பலர் ஓய்வு பெற்ற நிலையில், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படவில்லை. அதனாலும், ஸெனட் குழு முடங்கியுள்ளது.

பல்கலைக்கான துணைவேந்தர் நியமிக்கப்படாததால், துணைவேந்தர் வழிகாட்டுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு விஷயத்துக்குமான அனுமதியை பெற, அந்த குழுவில் உள்ள மூன்று துறை சார்ந்த அதிகாரிகளின் ஒப்புதலை பெற வேண்டியுள்ளது.

மூன்று இடங்களுக்குள்ளேயே கோப்புகள் சுற்றுவதால், முடிவுகள் எடுப்பதில் தாமதமாகிறது. முக்கியமாக மத்திய அரசிடம் நிதி பெறுவதற்கான எந்த முயற்சியையும் பல்கலை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், ஸெனட் கூட்டத்தை கூட்டினால், இதுபோன்ற பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும் என்பதால், கூட்டத்தை நடத்த பல்கலை நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை.

அறிவுறுத்தல்


இந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கை தயாரிப்பு பணிக்காக, ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்ட முக்கிய சாதனைகளை அனுப்பும்படி, பதிவாளர் கோரியுள்ளார். இதில், ஏற்கனவே வாசிக்கப்பட்ட கடந்தாண்டுக்கான ஆண்டறிக்கையும் சேர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதாவது, இந்தாண்டு எந்த சாதனையும் புரியாததால், கவர்னர் முன் அறிக்கை வாசிக்கும்போது, கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே வாசித்த அறிக்கையையும் சேர்க்க திட்டமிட்டுள்ளார்.

அதேபோல், மத்திய அரசு செயல்படுத்தும் முன்னோட்ட திட்டமான, 'விக்சித் பாரத்' எனும், 'வளர்ந்த பாரதம்' திட்டத்தில், துறைகளின் பங்களிப்பு பற்றியும் கருத்துகளை கேட்டுள்ளார்.

அதேபோல், மத்திய அரசு நடத்திய பல்கலைகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் சாதனைகளையும் சேர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

அதாவது, பட்டமளிப்பு விழாவில், பல்கலையின் வேந்தரான கவர்னர் பங்கேற்பார் என்பதால், அவர் விமர்சிக்க முடியாத வகையில், மத்திய அரசின் திட்டங்களையும் ஏற்று, பல்கலை செயல்படுகிறது என்பதற்காக, இவ்வாறு பதிவாளர் கேட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிண்டிகேட் கூடாமல் பட்டமளிப்பு: கேள்வி எழுப்பும் கல்வியாளர்கள்


சென்னை பல்கலையின் 167வது பட்டமளிப்பு விழா, வரும் 22ம் தேதி, பல்கலை வளாகத்தில் உள்ள ஸெனட் ஹாலில், காலை 10:30 மணிக்கு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல்கலை துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால், உயர்கல்வித்துறை செயலரே, மாணவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் கையெழுத்திடுவார். ஆனால் இதற்கு, பல்கலையின் சிண்டிகேட் குழு கூட்டத்தில் முறையாக ஒப்புதல் பெற வேண்டும்.
இருப்பினும், சிண்டிகேட் கூடவில்லை. மாறாக, சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு, பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான், பட்டமளிப்பு விழா கருப்பொருளை கடிதமாக அனுப்பி, இன்று காலை 11:00 மணிக்குள் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளார்.
கருத்து தெரிவிக்கவில்லை எனில், இந்த கருப்பொருள் உறுதி செய்யப்படும் என்றும், அவர் தெரிவித்துள்ளார். இதனால், பட்டமளிப்பு விழாவுக்கு ஒப்புதல் கிடைக்கும்.
பல்கலை பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு, கடந்த நவம்பர் மாதமே கவர்னர் ஒப்புதல் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், காலதாமதமாக நடவடிக்கை மேற்கொண்டு, சிண்டிகேட் குழுவை கூட்டாமல், திடீரென பதிவாளர் சுற்றறிக்கை வெளியிடுவது ஏன் என, பல்கலை வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றன.
இது ஒருபுறமிருக்க, பட்டமளிப்பு விழாவுக்கு, ஸெனட் கூட்டத்திலும் ஒப்புதல் பெற வேண்டும் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us