/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கவனச்சிதறல்களில் இருந்து பாதுகாக்க குழந்தைகளுக்கான கதைகள் அவசியம்'
/
'கவனச்சிதறல்களில் இருந்து பாதுகாக்க குழந்தைகளுக்கான கதைகள் அவசியம்'
'கவனச்சிதறல்களில் இருந்து பாதுகாக்க குழந்தைகளுக்கான கதைகள் அவசியம்'
'கவனச்சிதறல்களில் இருந்து பாதுகாக்க குழந்தைகளுக்கான கதைகள் அவசியம்'
ADDED : ஜன 09, 2024 12:23 AM

அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு கதைகள், பாடல்கள் என சிறுவர்களுக்காக தொடர்ந்து எழுதி வருபவர் கொ.மா.கோ.இளங்கோ. அவரிடம் பேசியதில் இருந்து...
சிறார் இலக்கியத்தின்
தேவை என்ன?
குழந்தைகளுக்கான அறம் என்பது, அவர்களை மகிழ்விப்பதுதான். கொரோனா பெருந்தொற்று காலத்தில், பல கதைசொல்லிகள் உருவானார்கள். அதற்கு காரணம், குழந்தைகள், கதைகளை ஆர்வமாக கேட்பதுதான்.
குழந்தைகள் பாடப்புத்தகங்களை உள்வாங்கிப் படிக்கவும், அவர்களை வேறு கவனச்சிதறல்களில் இருந்து பாதுகாக்கவும், குழந்தைகளுக்கான கதைகள் அவசியம். கதைகள் தான், வாசிப்புக்கான அடித்தளம். அதனால்தான், குழந்தைகளுக்கான புத்தகங்கள் தொடர்ந்து எழுதவும், வெளியிடவும் வேண்டி உள்ளது.
குழந்தைகளின் வாசிப்புக்கு அரசு என்ன செய்கிறது?
தற்போது குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்த, தன்னார்வலர்களின் வாயிலாக, பள்ளிக்கல்வித் துறை, பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம், வாசிப்பு இயக்கம், இளந்தளிர் இலக்கிய திட்டம் உள்ளிட்ட திட்டங்களை, அரசு செயல்படுத்துகிறது. இதனால் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த குழந்தைகளுக்கு கிடைத்த இலக்கிய சூழல் மீட்டுருவாக்கம் பெறுகிறது.
நன்னெறி கதைகள் மட்டும் போதுமா?
தொழில்நுட்ப யுகமான இக்காலத்தில், மொபைல் போன் விளையாட்டில் இருந்து குழந்தைகளை விடுவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவர்களுக்கு நன்னெறி கதைகள் தேவை.
அத்துடன் அறிவியல் புனைவுகள், மாயாஜாலம், சூழலியல், சமூக அறிவியல், மேஜிக்கல் ரியாலிசம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த கதைகள் பதிப்பிக்கப்படுகின்றன.அவற்றை, இந்த இயக்கங்கள் அறிமுகம் செய்கின்றன. குழந்தைகளை வாசிக்க வைப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகிறது.
புத்தகங்களை குழந்தைகளுக்கு எப்படி அறிமுகப்படுத்துவது?
முதலில் படக்கதைகளை அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது, புத்தகங்களை வாங்கி, அவர்களிடம் கொடுத்து வாசிக்க சொல்லக்கூடாது. நாமே அவற்றை சுவாரஸ்யமாக படித்துக்காட்ட வேண்டும்.
தற்போது, 16 பக்கங்கள் மட்டுமே உள்ள கதைகள், வண்ணப்படங்களுடன் வெளியாகின்றன. நானே, அப்படிப்பட்ட புத்தகங்களை நிறைய எழுதி உள்ளேன்.
இளந்தளிர் இலக்கியத்திட்டத்தின் வாசிப்பு இயக்கம் ஒரே பக்கத்தில் படமும், கதையும் என, பல நுால்களை வெளியிடுகிறது. பாரதி புத்தகாலயம் உலகத் தலைவர்கள், உலகின் தலைசிறந்த கதைகளை எளிமையாக மொழிபெயர்த்து வெளியிடுகிறது. இதை படிக்கும் குழந்தைகளும் எழுத்தாளர்களாகி, சிறுவர்களுக்கான நுால்களை எழுதி வெளியிடுகின்றனர்.
குழந்தைகளுக்கான புத்தகங்களை எங்கே வாங்கலாம்?
புக்ஸ் பார் சில்ட்ரன், வானம், வாசிப்பு இயக்கம் உள்ளிட்ட கடைகளில் பல்லாயிரக்கணக்கான சிறார் புத்தகங்கள் உள்ளன.
-- நமது நிருபர் --