/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தினமும் 2 கி.மீ., அணிவகுக்கும் வாகனங்கள் நெரிசலால் திக்குமுக்காடும் சோழிங்கநல்லுார்
/
தினமும் 2 கி.மீ., அணிவகுக்கும் வாகனங்கள் நெரிசலால் திக்குமுக்காடும் சோழிங்கநல்லுார்
தினமும் 2 கி.மீ., அணிவகுக்கும் வாகனங்கள் நெரிசலால் திக்குமுக்காடும் சோழிங்கநல்லுார்
தினமும் 2 கி.மீ., அணிவகுக்கும் வாகனங்கள் நெரிசலால் திக்குமுக்காடும் சோழிங்கநல்லுார்
ADDED : ஜன 24, 2024 12:25 AM

சென்னை, ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை, சென்னையின் பிரதான சாலையாக உள்ளது. இங்கு, அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி., நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
இதனால், வழக்கமாகவே போக்குவரத்து நெரிசல் இருக்கும்.இந்நிலையில், 2022ம் ஆண்டு முதல் சாலையின் இருவழி பாதையை அடைத்து, மையப் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது.
இதனால், துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.கடந்த மாதம், துரைப்பாக்கம் சந்திப்பில் ஒரு வழி பாதையாக மாற்றியதால், அங்கு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.
ஒருவழிப்பாதை
ஆனால், சோழிங்கநல்லுார் சந்திப்பு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படவில்லை. இதனால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், இரு திசையிலும், 1 கி.மீ., துாரம் வரையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.
இதனால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்கள் உள்ளிட்டவை, மாற்று பாதை இல்லாததால் நெரிசலில் சிக்கி திக்குமுக்காடுகின்றன.
சோழிங்கநல்லுார் சந்திப்பை பொறுத்தவரை, வடக்கு, தெற்கு திசைகளில் உள்ள அணுகு சாலையில், வாகனங்கள் நிறுத்தி செல்வதை தடுத்தாலே, நெரிசல் ஓரளவு தடுக்க முடியும்.போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால், அணுகு சாலையில் நிறுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
இதனால், மாலை வேளையில் இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகனங்களை, அக்கரையில் மடக்கி சோழிங்கநல்லுார் வழியாக திருப்பி விடுவதால், சோழிங்கநல்லுார் சந்திப்பில் நெரிசல் மேலும் அதிகரிக்கிறது.
ஒருங்கிணைப்பு இல்லை
அக்கரை சந்திப்பு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டிலும், சோழிங்கநல்லுார் சந்திப்பு தாம்பரம் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இரு கமிஷனரின் கீழ் உள்ள, உயர் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், நெரிசலுக்கு தீர்வு காண முடியாமல் கீழ்மட்ட போலீசார் திணறுகின்றனர்.'கொரோனா' காலகட்டத்திற்கு முன், பீக் ஹவர்ஸ் வேளைகளில், ஓ.எம்.ஆரில் குடிநீர், கழிவுநீர் லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அப்போது, மெட்ரோ ரயில் பணி நடைபெறவில்லை.தற்போது, நெரிசல் அதிகம் என தெரிந்தும், பீக் ஹவர்ஸ் நேரத்தில் குடிநீர், கழிவுநீர் லாரிகளை அனுமதிப்பதும், நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
தீர்வு என்ன?
மேலும், காரப்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி செல்லும் வாகனங்களை, 'யு - டர்ன்' செய்து அனுப்பினால், நெரிசல் கணிசமாக குறையும்.இதற்கான நடவடிக்கையை, போக்குவரத்து போலீசார் மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைந்து செய்ய வேண்டும்.காவல் உயர் அதிகாரிகள் தலையிட்டு, சோழிங்கநல்லுார் சந்திப்பில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
'மெட்ரோ' அலட்சியம்
இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:மெட்ரோ ரயில் பணிக்கு முன், அணுகு சாலையில் நிறுத்தும் வாகனங்கள் மீது சுதந்திரமாக நடவடிக்கை எடுத்தோம். இப்போது எடுக்க முடியவில்லை.
இ.சி.ஆரில் திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகனங்களை, சோழிங்கநல்லுார் நோக்கி திருப்பி விடுவதை தடுக்க வேண்டும் என, பல கடிதம் எழுதி விட்டோம்.
காரப்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி செல்லும் வாகனங்களை, 'யு - டர்ன்' செய்து திருப்பி விட்டால் நெரிசல் குறையும். இதற்காக, கள ஆய்வு செய்து வருகிறோம்.
ஒவ்வொரு சிக்னலின்போதும், இடையில், 100 முதல் 120 பேர் வரை சாலையை கடக்கின்றனர். இதனால், அதிக நேரம் சிக்னலை நிறுத்தி வைக்க வேண்டி உள்ளது. சந்திப்பில், நடை மேம்பாலம் அமைப்பது அவசியம். சாலை பள்ளங்களும் நெரிசலுக்கு காரணமாக உள்ளது.
பள்ளத்தை சீரமைக்க, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் தினமும் கூறுகிறோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு போலீசார் கூறினர்.

