பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பில் மெத்தனம் லேசான மழைக்கே தத்தளிக்கும் குரோம்பேட்டை
பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பில் மெத்தனம் லேசான மழைக்கே தத்தளிக்கும் குரோம்பேட்டை
UPDATED : நவ 24, 2026 08:22 PM
ADDED : நவ 24, 2026 08:16 PM
குரோம்பேட்டை: பாதாள சாக்கடை திட்ட பணிகளில், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் அக்கறை செலுத்தாததால், லேசான மழைக்கே குரோம்பேடை பகுதியில் ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஓடுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே, பழைய குழாய்களை அகற்றிவிட்டு, புதிதாக அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பல்லாவரம், நகராட்சியாக இருந்த போது பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு, 75.33 கோடி ரூபாய் செலவில், 2005ல் பணிகள் தொடங்கி 2012ல் முடிந்தது. மொத்தம் 159.74 கி.மீ., நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் புதைக்கப்பட்டன.
அப்போது, 27 ஆயிரத்து, 243 வீட்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டன. இத்திட்டத்தில், ஐந்து இடங்களில், சிறிய உந்து நிலையங்களும், கீழக்கட்டளை ஏரி கரையை ஒட்டி, பம்பிங் ஸ்டேஷனும் அமைக்கப்பட்டன. அதன்பின், விடுபட்ட பகுதிகளில், 24.06 கோடி ரூபாய் செலவில், 41 கி.மீ., நீளத்திற்கு பணிகள் நடந்தன.
இதில், கூடுதலாக, 13 ஆயிரத்து, 800 இணைப்புகள் கொடுக்கப்பட்டன. ஜி.எஸ்.டி., சாலையில் மேற்கு பகுதிகளில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை, ரயில்வே லைனை கடந்து புதுவை நகர் வழியாக ரேடியல் சாலை பிரதான குழாயில் கலந்து, கீழ்க்கட்டளை பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்கிறது.
மற்றொரு புறம், 9, 13 – 21 வரையுள்ள வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அருள்முருகன் டவர் வழியாக ரேடியல் சாலையில் கலந்து, பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்கிறது. 23 – 26, 35 – 38 ஆகிய வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நெமிலிச்சேரி வழியாக கீழ்க்கட்டளைக்கு செல்கிறது.
பல்லாவரத்தில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வந்து, 13 ஆண்டுகளான நிலையில், ஆண்டுதோறும் பராமரிப்புக்காக பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அந்த பணத்தை கொண்டு முறையாக பராமரிக்காமல், பல்வேறு தில்லுமுல்லு செய்கின்றனர்.
இதனால், முறையான பராமரிப்பு இன்றி, பல இடங்களில் குழாய்கள் உடைந்து சேதமடைந்துள்ளன. லேசான மழை பெய்தாலே, திரும்பிய இடமெல்லாம் பாதாள சாக்கடை மூடியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவது தொடர்கதையாகி உள்ளது.
தற்போது பெய்து வரும் மழையால், ராமச்சந்திரா சாலை, சீனிவாசா நகர், ராஜாஜி தெரு, எம்.ஐ.டி., மேம்பாலம் சுற்றுப்புற பகுதிகளில், பாதாள சாக்கடை மூடி வழியாக சாலையில் கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, தமிழக அரசு அக்கறை செலுத்தி, பழைய குழாய்களை அகற்றிவிட்டு, புதிதாக குழாய்களை பதித்து, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
