/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிடாரி காளியம்மன் கோவிலில் ரூ.7.20 லட்சம் திருடிய சிறுவன் கைது
/
பிடாரி காளியம்மன் கோவிலில் ரூ.7.20 லட்சம் திருடிய சிறுவன் கைது
பிடாரி காளியம்மன் கோவிலில் ரூ.7.20 லட்சம் திருடிய சிறுவன் கைது
பிடாரி காளியம்மன் கோவிலில் ரூ.7.20 லட்சம் திருடிய சிறுவன் கைது
UPDATED : ஆக 06, 2025 03:06 AM
ADDED : ஆக 06, 2025 12:21 AM
கே.கே., நகர், கே.கே., நகர் பிடாரி காளியம்மன் கோவிலில் இருந்து 7.20 லட்சம் ரூபாய் திருடிய சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.
வடபழனி, 100 அடி சாலையில், நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் அருண் மற்றும் போலீஸ்காரர் மகேந்திரன் ஆகியோர், அங்குள்ள டீ கடைக்கு சென்றனர்.
அங்கு, திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 16 வயது சிறுவன், போலீசாரை பார்த்ததும் வெளியே செல்ல முயன்றார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, முன் பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார், சிறுவனை சோதனை செய்தபோது அவரது பேன்ட் பாக்கெட்டில் 30,000 ரூபாய் இருந்தது.
இதையடுத்து, சிறுவனை வடபழனி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, வானகரம் மீன் கடையில், தான் பணிபுரிவதாகவும், இரண்டு மாத ஊதியம்தான் இப்பணம் எனவும் சிறுவன் கூறியுள்ளார்.
ஆனால், தன் முதலாளியை தொடர்பு கொள்வதாக சிறுவன் தந்த மொபைல் போன் எண் தவறாக இருந்ததால், போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
மேலும் துருவி துருவி விசாரித்தபோது, வடபழனியில் மது போதையில் துாங்கிய நபரிடம் இருந்து பணத்தை திருடினேன் என கூறியுள்ளார். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அப்படி யாரும் அங்கு துாங்குவதில்லை என்பது தெரிந்தது.
இதற்கிடையே, சிறுவனை பிடித்த டீ கடையில் மர்ம பெட்டி ஒன்று கிடப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்து, அங்கு சென்று வடபழனி போலீசார் பார்த்தனர். அதில், கட்டுக்கட்டாக ஏழு லட்சம் ரூபாய் இருந்தது.
கடையில் விசாரித்தபோது, பெட்டி வந்தது குறித்து தங்களுக்கு தெரியாது என, உரிமையாளர், ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சிறுவனிடம் மீண்டும் விசாரித்தபோது, கே.கே., நகர், 100 அடி சாலையில் உள்ள பிடாரி காளியம்மன் கோவில் பீரோவில் இருந்து அந்த பணத்தை திருடி வந்ததை, சிறுவன் ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே, கோவிலில் இருந்த பணம் திருடுபோனதாக, கே.கே.நகர் காவல் நிலையத்தில், நேற்று புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, சிறுவனையும், பறிமுதல் செய்யப்பட்ட 7.20 லட்சம் ரூபாயையும், கே.கே., நகர் போலீசாரிடம் வடபழனி போலீசார் ஒப்படைத்தனர். கே.கே., நகர் போலீசார், சிறுவனை கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.