/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோலடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு பகுதிவாசிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு
/
கோலடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு பகுதிவாசிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு
கோலடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு பகுதிவாசிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு
கோலடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு பகுதிவாசிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு
ADDED : மே 24, 2025 11:54 PM

திருவேற்காடு :திருவேற்காடு நகராட்சி முழுதும் கழிவு நீர் பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், 510.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த திட்டமிட்டது. இதற்காக கோலடி பகுதியில், 8.30 ஏக்கர் பரப்பில் உள்ள மைதானத்தின் ஒரு பகுதியில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவெடுக்கபட்டுள்ளது. சுற்றியுள்ள பூந்தமல்லி மற்றும் மாங்காடு நகராட்சிகளில் இருந்து கழிவு நீரை, 'பம்பிங் ஸ்டேஷன்' வாயிலாக திருவேற்காடிற்கு கொண்டு வந்து சுத்திகரித்து, கூவம் ஆற்றில் விட முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மைதானம் கபளீகரம்?
இது குறித்த கருத்து கேட்பு கூட்டம், கடந்த மார்ச் 11ம் தேதி, திருவேற்காடில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 27ம் தேதி, அங்கு 200க்கும் மேற்பட்ட வீரர்கள், கோலடி மைதானத்தில் பேட், பால், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை கீழே போட்டு, மண்ணை துாவி 'இறுதி சமாதி' என, நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 7ம் தேதி, கோலடி பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனு அளிக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மைதானத்தின் ஒரு பகுதியை சிலர் ஆக்கிரமித்து, சவுடு மண், கட்டட கழிவு கொட்டி, ஆக்கிரமித்துள்ளதாக, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றுள்ளது. அதன்படி, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தலின்படி, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின், மைதானத்தின் ஆக்கிரமிப்பை தடுக்க வேலி அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பேச்சு தோல்வி
இது குறித்து தகவலறிந்த பகுதிவாசிகள், அதிகாரிகள் வேலி அமைத்தால், சுத்திகரிப்பு நிலைய பணிகளை மேற்கொள்ள வசதியாகிவிடும் என அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். நேற்று காலை 7:00 மணி முதல் கோலடி மைதானத்தில் பகுதிவாசிகள் திரண்டனர். காலை 9:30க்குள் அங்கு 250க்கும் மேற்பட்டோர் கருப்பு ரிப்பன் அணிந்து ஒன்று கூடினர்.
திருவேற்காடு நகராட்சிக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இரண்டு போலீஸ் உதவி கமிஷனர்கள் தலைமையில், 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இரண்டு முறை நகராட்சி அதிகாரியுடன் நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து செல்ல மறுத்ததால், போலீசார் குண்டுக்கட்டாக அவர்களை துாக்கி கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
போக்குவரத்து நெரிசல்
இச்சம்பவத்தின்போது, போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், திருவேற்காடு - அயப்பாக்கம் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் இரண்டு கி.மீ., துாரத்திற்கு அணிவகுத்து நின்றன.
பொதுமக்கள் கைது செய்யப்பட்டு, அழைத்து செல்லப்பட்டதும், திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் தங்களது ஊழியர்களை வைத்து, மைதானத்தை சுற்றிலும் ஆங்கில எழுத்தான, 'எல்' வடிவில், 330 மீ., துாரத்திற்கு 'பொக்லைன்' இயந்திரத்தின் உதவியுடன், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பீடில், ஏழு அடிக்கு ஒரு கான்கிரீட் கல் என, 150க்கும் மேற்பட்ட கான்கிரீட் கற்களை வைத்து, வேலி அமைத்தனர்.