/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீராங்கல் ஓடையில் துாய்மை பணி ஆகாய தாமரை கொடிகள் அகற்றம்
/
வீராங்கல் ஓடையில் துாய்மை பணி ஆகாய தாமரை கொடிகள் அகற்றம்
வீராங்கல் ஓடையில் துாய்மை பணி ஆகாய தாமரை கொடிகள் அகற்றம்
வீராங்கல் ஓடையில் துாய்மை பணி ஆகாய தாமரை கொடிகள் அகற்றம்
ADDED : மே 22, 2025 12:26 AM

ஆலந்துார், மடுவின்கரை, ஆதம்பாக்கம் ஏரி, நங்கநல்லுார், உள்ளகரம், புழுதிவாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், வடிகால்வாய் வழியாக வீராங்கல் ஓடையில் கலக்கிறது.
அங்கிருந்து, வேளச்சேரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாக, ஒக்கியம்மடு சென்று, அங்கிருந்து கடலில் கலக்கிறது.
மழைகாலங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுத்தாமல் மழைநீர் செல்ல ஏதுவாக, 2010ம் ஆண்டு வீராங்கல் ஓடையின் இருபுறமும், 23 கோடி ரூபாய் செலவில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது.
ஆனால், வாணுவம்பேட்டையில் இருந்து புழுதிவாக்கம் வரை, ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கப்படவில்லை.
இது குறித்து, நம் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, வீராங்கால் ஓடை புனரமைப்பு பணி, 19 கோடி ரூபாயில், 2023 ஆண்டு நடந்தது.
ஓடை இடத்திற்கு ஏற்றவாறு, ஐந்து மீட்டரில் இருந்து, 14 மீட்டர் அகலம் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது.
தரை மட்டத்தில் இருந்து, 4 மீட்டர் உயரத்திற்கு, இருபுறமும், 1,200 மீட்டர் துாரம் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், வீராங்கல் ஓடையின் வாணுவம்பேட்டை பகுதி, சிதம்பரனார் தெரு மற்றும் உள்ளகரம் என்.எஸ்.சி.போஸ் சாலை ஆகியவற்றை இணைக்கும் இடத்தில், சிறுபாலம் அகற்றப்பட்டு, மூன்று அடி உயரத்திற்கு புதிய பாலம் அமைக்கப்பட்டது.
மழைநீர் செல்ல வழி செய்யப்பட்ட நிலையில், வீராங்கல் ஓடையின் இருபக்க குடியிருப்புவாசிகளும், அப்பகுதியில் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இந்நிலையில், ஆதம்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை, ஓடையின் மேல் சகதி, செடி, கொடி காணப்பட்டது. ஆகாய தாமரை செடிகளும் வளர்ந்து காணப்பட்டது. இதனால், மழைக்காலத்தில் நீரோட்டம் தடைபடும் என, சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர்.
அதனால், வீராங்கால் ஓடையில் உள்ள செடி, கொடி, ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணியில் ஆலந்துார், அடையாறு மண்டல ஊழியர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
- -நமது நிருபர்- -