/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் கோப்பை ஹாக்கி திருச்சி அணி கோல் மழை
/
முதல்வர் கோப்பை ஹாக்கி திருச்சி அணி கோல் மழை
ADDED : அக் 07, 2024 01:05 AM

சென்னை:சென்னையில் நடந்த முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட அணிக்கு எதிரான ஆட்டத்தில், திருச்சி அணி வீரர்கள், 'கோல்' மழை பொழிந்தனர்.
நடப்பு ஆண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என, ஐந்து பிரிவின் கீழ் போட்டிகள் நடக்கின்றன.
தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் சார்பில் நடக்கும் தடகளம் உள்ளிட்ட அனைத்து போட்டிகளில், நடப்பு ஆண்டில் இரு பாலரிலும் மொத்தம் 11 லட்சத்து 56 ஆயிரத்து 566 வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இதில், நேற்று முன்தினம் சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த, பள்ளி மாணவியருக்கான ஹாக்கி போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்ட அணிக்கு எதிரான போட்டியில், திருச்சி மாவட்ட அணி வீராங்கனையர், அடுத்தடுத்து கோல் மழை பொழிந்து, இறுதியில் 13--0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றனர்.
நேரு மைதானத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் சேலம், வேலுார் அணிகள் இடையேயான போட்டி, 1 - -1 என, டிரா ஆனது. வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில், சேலம் அணி 4- - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பொதுப் பிரிவினருக்கான பேட்மின்டன் பெண்கள் பிரிவில் தஞ்சை கவியரசி, திருச்சி கனிஷ்கா, மதுரை அனிகா ஜெர்லின், சிவகங்கை ஆர்த்தி ரசிகா ஆகியோர் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.