/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சி.எம்.டி.ஏ., நிர்வாகம், தொழில்நுட்ப பிரிவில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
/
சி.எம்.டி.ஏ., நிர்வாகம், தொழில்நுட்ப பிரிவில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
சி.எம்.டி.ஏ., நிர்வாகம், தொழில்நுட்ப பிரிவில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
சி.எம்.டி.ஏ., நிர்வாகம், தொழில்நுட்ப பிரிவில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
ADDED : மே 10, 2025 12:29 AM
சென்னை, சி.எம்.டி.ஏ.,வில் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு நிலைகளில், 20 சதவீதம் வரையிலான பணியிடங்கள் காலியாக உள்ளன. நேரடி தேர்வு முறையை கைவிட்டு, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக பணியிடங்களை நிரப்ப சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது.
பழைய பணி விதிகள் கைவிடப்பட்டு, புதிய பணி விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பல்வேறு பணியிடங்கள் சீரமைக்கப்பட்டன. பணியிடங்கள் சீரமைப்பு மற்றும் பெயர் மாற்றம் போன்ற நடவடிக்கைகளால், காலியிடங்கள் நிரப்புவது தாமதமானது.
இந்நிலையில், சி.எம்.டி.ஏ., கோரிக்கை அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை, அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட துவங்கியுள்ளது.
முதற்கட்டமாக, ஆறு உதவி திட்ட அலுவலர், 10 தட்டச்சர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் டெபுடி பிளானர், திட்ட உதவியாளர் பணியிடங்கள் விடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து சி.எம்.டி.ஏ., பணியாளர்கள் கூறியதாவது:
சி.எம்.டி.ஏ.,வில் கட்டுமான திட்ட அனுமதி உள்ளிட்ட பல்வேறு பணிகளில், முக்கிய பொறுப்பில் உள்ள டெபுடி பிளானர்களுக்கான 20 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 20 ஆண்டுகளாக நேரடி நியமனத்திற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், அவை நிரப்பப்படுவது இல்லை.
இந்நிலையில் பதவி உயர்வு வாயிலாக, டெபுட்டி பிளானர் இடத்தில் நியமிக்க தகுதியான நபர்கள் இல்லை. எனவே, இதில் ஒருபகுதி இடத்தை, அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிரப்ப அதிகாரிகள் நிலையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், அதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடைசியாக நேரடி தேர்வு வாயிலாக நியமிக்கப்பட்ட உதவி திட்ட அலுவலர்களில் சிலருக்கு, பணி அனுபவ காலத்தில் ஓராண்டு மட்டும் தளர்வு வழங்கினால், 10க்கும் மேற்பட்ட டெபுட்டி பிளானர் இடங்களை நிரப்பலாம். இதற்கான நடவடிக்கையை சி.எம்.டி.ஏ., நிர்வாகம் எடுக்க வேண்டும். அப்போது தான் சீரான நிர்வாக அமைப்பை உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.