/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏரி, குளக்கரை ஆக்கிரப்பில் வசிப்போருக்கு மாற்று இடம் தர சி.எம்.டி.ஏ., ஆலோசனை
/
ஏரி, குளக்கரை ஆக்கிரப்பில் வசிப்போருக்கு மாற்று இடம் தர சி.எம்.டி.ஏ., ஆலோசனை
ஏரி, குளக்கரை ஆக்கிரப்பில் வசிப்போருக்கு மாற்று இடம் தர சி.எம்.டி.ஏ., ஆலோசனை
ஏரி, குளக்கரை ஆக்கிரப்பில் வசிப்போருக்கு மாற்று இடம் தர சி.எம்.டி.ஏ., ஆலோசனை
ADDED : நவ 05, 2025 01:23 AM
சென்னை: சென்னையில் ஏரி, குளம் மற்றும் சாலையோரங்களில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்க, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் பல்துறை அதிகாரிகளும் நேற்று ஆலோசனை நடத்தினர்.
பருவ மழைக்காலங்களில் சென்னையின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கி, மக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஏரி, குளம் போன்ற நீர் நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்தான், அதிகம் பாதிப்பில் சிக்குகின்றன.
சில ஆண்டுகளாக ஏரி, குளங்கள், கால்வாய்களில் ஆக்கிரமித்த மக்கள், மழைக்காலத்தில் தண்ணீரை வேறு பக்கம் திருப்பி விடுகின்றனர். உள்ளூர் அரசியல் பிரமுகர்களும், இதற்கு மறைமுகமாக உதவுகின்றனர்.
இதனால், சி.எம்.டி.ஏ.,விடம் முறையாக அங்கீகாரம், கட்டட அனுமதி பெற்று மக்கள் வசிக்கும் பகுதிகளும் வெள்ளத்தில் சிக்குகின்றன.
இதையடுத்து, சென்னை பெருநகரில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, சீரமைக்கும் திட்டத்தை, சி.எம்.டி.ஏ., செயல்படுத்தி வருகிறது.
இந்த வகையில் ஏரி, குளங்கள், கால்வாய்கள், சாலையோரங்களில் வசிப்போருக்கு, முறையாக மாற்று இடம் ஒதுக்க, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சி.எம்.டி.ஏ., தலைவரும், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தலைமையில் நேற்று நடந்தது.
அதில், மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் பிரகாஷ், நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
மாற்று இடம் வழங்குவதற்கான நடைமுறைகள், நிலம் இருப்பு குறித்த விஷயங்கள், இதில் விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் வர உள்ளதால், விரைந்து மாற்று இடங்கள் வழங்கும் பணிகள் துவக்ககப்படும் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

