தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நிதி ஆதாரத்திற்கேற்ப புது திட்டங்கள் சி.எம்.டி.ஏ., முடிவு

 நிதி ஆதாரத்திற்கேற்ப புது திட்டங்கள் சி.எம்.டி.ஏ., முடிவு

 நிதி ஆதாரத்திற்கேற்ப புது திட்டங்கள் சி.எம்.டி.ஏ., முடிவு


ADDED : பிப் 09, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சாத்தியக்கூறு, நிதி ஆதாரம் உள்ள திட்டங்களை மட்டுமே பரிந்துரைகளாக வழங்கும் வகையில், மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை பெருநகர் பகுதிக்கான இரண்டாவது முழுமை திட்டம், 2008ல் அறிவிக்கப்பட்டது. முறையான மறு ஆய்வு, புதுப்பித்தல் இன்றி இத்திட்டம் காலாவதியானது.

குறிப்பாக, முழுமை திட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பெரும்பாலான பரிந்துரைகள் திட்டங்களாக மாறவில்லை என, புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில், மூன்றாவது முழுமை திட்ட தயாரிப்பு பணிகள், 2022ல் துவங்கின. இதற்காக பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் புதிய திட்டங்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளன.

இது தொடர்பாக, 27 தலைப்புகளில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதில் எந்தெந்த திட்டங்களை முழுமை திட்ட வரைவு அறிக்கையில் சேர்க்கலாம் என, ஆலோசனை நடந்து வருகிறது.

இது தொடர்பாக, சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட முதல், இரண்டாவது முழுமை திட்டங்களில் தெரிவிக்கப்பட்ட பல்வேறு பரிந்துரைகள் செயல்பாட்டுக்கு வரவில்லை.

எனவே, செயல்படுத்த உகந்த பரிந்துரைகளை மட்டுமே, மூன்றாவது முழுமை திட்டத்தில் சேர்க்க உள்ளோம்.

குறிப்பாக, பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில், புதிய திட்டங்களுக்கான பரிந்துரைகள் குறித்து, உள்ளாட்சி அமைப்புகள், அரசின் பல்வேறு துறைகளின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.

இப்பரிந்துரைகள் அடிப்படையில், திட்டங்கள் உருவாக்குதல் மற்றும் செயல்படுத்தலுக்கான சாத்தியக்கூறுகள் உறுதி செய்யப்படுகின்றன.

புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரத்துக்கு வழி என்ன என்பதையும், இப்போதே உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதனால், முந்தைய முழுமை திட்டங்கள் போன்று இல்லாமல், மூன்றாவது முழுமை திட்டம் எதார்த்த நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காற்றில் கரைந்த பரிந்துரைகள்

சி.எம்.டி.ஏ.,வின் இரண்டாவது முழுமை திட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படாத பரிந்துரைகள்:  நகரின் மையப்பகுதிகளில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க, போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டி, கட்டுமான நிறுவனங்கள் வாயிலாக, சிறிய அளவில் புதிய நகர்கள் உருவாக்கப்படும்  பிரதான சாலைகளில் பஸ் போக்குவரத்துக்கு தனி பாதை ஒதுக்கும் பி.ஆர்.டி.எஸ்., திட்டம்  தனியார் பங்களிப்புடன் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டங்கள்  நிலத்தடி நீராதார பகுதிகள், கடலோர பகுதிகள் பாதுகாப்பு திட்டங்கள் பாரம்பரிய கட்டடங்கள் பாதுகாப்பு மற்றும் புதுப்பிப்பதற்கான நிதி ஏற்படுத்துதல் ஒருங்கிணைந்த முறையில் குடிநீர் வழங்கல், கழிவு நீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் என, பல்வேறு திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வரவில்லை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us