/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குத்தம்பாக்கத்தில் நில தொகுப்பு திட்டம்; கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
/
குத்தம்பாக்கத்தில் நில தொகுப்பு திட்டம்; கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
குத்தம்பாக்கத்தில் நில தொகுப்பு திட்டம்; கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
குத்தம்பாக்கத்தில் நில தொகுப்பு திட்டம்; கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
ADDED : டிச 08, 2025 05:32 AM
சென்னை: திருமழிசையை அடுத்த குத்தம்பாக்கத்தில், 373 ஏக்கரிலான நில தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., முடுக்கிவிட்டுள்ளது.
சென்னை பெருநகர் பகுதியில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருமழிசை, மீஞ்சூர் ஆகிய பகுதிகளில், புதிய துணை நகரம் ஏற்படுத்த, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளையும், சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது.
இதில், தாம்பரம் அடுத்த மாடம் பாக்கத்தில், நில தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. நிலம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், வழக்கு காரணமாக பணிகள் தேக்கம் அடைந்தன.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில், நில தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
இதில் குத்தம்பாக்கத்தில், 336.96 ஏக்கர், பழஞ்சூரில், 36.25 ஏக்கர் என மொத்தம், 373.21 ஏக்கரில் நில தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் நிலத்தை கையகப்படுத்தாமல், உரிமையாளரிடம் நுழைவு அனுமதி பெற்று, நில தொகுப்பு திட்ட நகருக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு உரிமையாளருக்கும், 60 சதவீத அளவுக்கு மேம்படுத்தப்பட்ட மனைகள் வழங்கப்படும்.
இங்கு சாலைகள், மழை நீர் வடிகால்கள், பூங்காக்கள், புதிய புறவழி சாலைகள், பாலங்கள் ஆகியவற்றுக்கான இடங்கள் ஒதுக்கப்படும்.
இதில், எந்தெந்த சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலங்கள் வருகின்றன என்ற விபரத்தை, https://www.cmdachennai.gov.in/ என்ற இணையதளத்தில், சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், நில உரிமையாளர்கள் இந்த மாத இறுதிக்குள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.

