/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சி.எம்.டி.ஏ.,வின் சாலை, ரயில் பிரிவு 'கும்டா'வுக்கு...மாறுகிறது திட்டங்கள் இன்றி முடங்கி கிடந்ததால் அரசு முடிவு
/
சி.எம்.டி.ஏ.,வின் சாலை, ரயில் பிரிவு 'கும்டா'வுக்கு...மாறுகிறது திட்டங்கள் இன்றி முடங்கி கிடந்ததால் அரசு முடிவு
சி.எம்.டி.ஏ.,வின் சாலை, ரயில் பிரிவு 'கும்டா'வுக்கு...மாறுகிறது திட்டங்கள் இன்றி முடங்கி கிடந்ததால் அரசு முடிவு
சி.எம்.டி.ஏ.,வின் சாலை, ரயில் பிரிவு 'கும்டா'வுக்கு...மாறுகிறது திட்டங்கள் இன்றி முடங்கி கிடந்ததால் அரசு முடிவு
ADDED : மே 01, 2025 11:18 PM

சென்னை, : சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், புதிய திட்டங்கள், வேலைகள் எதுவும் இன்றி முடங்கிக்கிடந்த சாலை, ரயில் பிரிவுகளை, போக்குவரத்து குழுமமான 'கும்டா'வுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. 'இந்த மாற்றம் நகரின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்' என, வீட்டுவசதி துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில், நகர்ப்புற திட்டமிடல் மேம்பாட்டிற்காக பல்வேறு பிரிவுகள் துவங்கப்பட்டன.
இதன்படி, முழுமை திட்டங்கள் தயாரிக்க, சாலை, ரயில் திட்டங்களை செயல்படுத்த, கட்டட அனுமதி வழங்க என, ஏழு பிரிவுகள் துவங்கப்பட்டன.
இதில் சாலை மற்றும் ரயில் பிரிவுக்கு, வெளிவட்ட சாலை திட்டம், கடற்கரை - பரங்கிமலை மேம்பால ரயில் திட்டம், மேம்பால ரயில் நிலைய காலியிட மேம்பாடு, போக்குவரத்து வசதிகள் ஒருங்கிணைப்பு திட்டம் ஆகிய பணிகள் ஒதுக்கப்பட்டன.
வெளிவட்ட சாலை, மேம்பால ரயில் திட்டம் ஆகியவற்றில் பணிகள் முடிந்துவிட்டதால், அதில், சி.எம்.டி.ஏ.,வுக்கு வேலை இல்லை. இதேபோல, மேம்பால ரயில் நிலைய காலியிட மேம்பாடு திட்டத்தில், எந்த வேலையும் நடக்கவில்லை.
இதனால், போக்குவரத்து சேவைகள் ஒருங்கிணைப்பு திட்டம், போக்குவரத்து குழுமமான 'கும்டா'வுக்கு மாற்றப்பட்டுவிட்டது.
இந்நிலையில், முறையாக எந்த பணியும், புதிய திட்டங்களும் இல்லாமல், சி.எம்.டி.ஏ.,வின் சாலை, ரயில் பிரிவு முடங்கி உள்ளது.
இப்பிரிவுக்கு, ஒரு தலைமை பிளானர், இரண்டு சீனியர் பிளானர், இரண்டு துணை திட்ட அலுவலர்கள், இதற்கு கீழ், உதவி திட்ட அலுவலர்கள், திட்ட உதவியாளர்கள் என, பணியிடங்கள் உள்ளன.
இந்த பிரிவில் புதிய திட்டங்கள் இல்லாததால், அதிகாரிகள் வேறு பிரிவு பணிகளை கவனிக்கின்றனர்.
சென்னை பெருநகரில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுக்கு அதிக திட்டமிடல் தேவைப்படும் நிலையில், இதற்கான ஒரு பிரிவு செயலற்று முடங்கி இருப்பது, அரசின் கவனத்துக்கு சென்று உள்ளது.
அதேநேரம், சென்னை பெருநகரில் சாலை, ரயில் உள்ளடக்கிய போக்குவரத்து சார்ந்த புதிய திட்டங்களை, 'கும்டா' உருவாக்கி வருகிறது.
இந்த குழுமத்தில் போதிய பணியிடங்கள், அலுவலர்கள் தேவையும் அதிகரித்து வருகிறது.
எனவே, சி.எம்.டி.ஏ.,வில் பணிகள் இல்லாத, சாலை, ரயில் பிரிவை கும்டாவுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
போக்குவரத்து சார்ந்த அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கவே, கும்டா துவங்கப்பட்டு உள்ளது.
இத்தகைய அமைப்பு இல்லாதபோது, சாலை, ரயில் போக்குவரத்து திட்டங்களை, சி.எம்.டி.ஏ., செயல்படுத்தியதில் பிரச்னை இல்லை.
தற்போது ஒரு தனி அமைப்பு வந்த பின், சாலை, ரயில் பிரிவை கும்டாவுக்கு மாற்றுவதே சரியாக இருக்கும்.
கும்டாவுக்கான நிர்வாக அமைப்பை ஏற்படுத்தும்போது, சி.எம்.டி.ஏ.,வின் சாலை ரயில் பிரிவை இங்கு மாற்ற உத்தரவிடப்பட்டது. அதிகாரிகள் அலட்சியமாக இருந்து விட்டனர்.
தற்போது, சாலை, ரயில் பிரிவை மாற்ற அரசு முடிவு செய்து, அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சி.எம்.டி.ஏ.,வில் உள்ள 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள், கும்டாவுக்கு இடம் மாறுவர். அவர்களின் அனுபவம், நகர வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்த பயன்படும்.
சென்னையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால், இந்த விவகாரத்தில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.