/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் தி.மு.க., தேர்தல் அறிக்கை என்னாச்சு?
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் தி.மு.க., தேர்தல் அறிக்கை என்னாச்சு?
ரேஷனில் தேங்காய் எண்ணெய் தி.மு.க., தேர்தல் அறிக்கை என்னாச்சு?
ரேஷனில் தேங்காய் எண்ணெய் தி.மு.க., தேர்தல் அறிக்கை என்னாச்சு?
ADDED : பிப் 18, 2024 12:18 AM

சென்னை, 'ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்க வேண்டும்' என, வலியுறுத்தி, சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், இந்திய தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்தவர்கள், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள், இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட போது, கைது செய்யப்பட்டு சமூக நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். போராட்டம் குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறியதாவது:
உள்நாட்டு எண்ணெய் வித்துக்களான தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை ஊக்குவிப்பு செய்யாமல், மானியம் வழங்காமல், அரசு இந்தோனேஷியா, மலேஷியாவில் இருந்து, 1 லிட்டர் பாமாயில் 100 ரூபாய்க்கு வாங்கி, ரேஷன் கடைகளில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.
இதனால், மாதந்தோறும், 1.96 கோடி லிட்டர் பாமாயிலை தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. இதனால், ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாயை, மானியமாக பாமாயில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாமாயிலை தடை செய்து, ரேஷன் கடைகளில் உள்நாட்டு எண்ணெய்களை விற்பனை செய்ய வேண்டும் என, 30 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'தமிழ்நாடு தென்னை நல வாரியம் வாயிலாக, தேங்காய் எண்ணெயை அரசே கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றது.
அரசு தெரிவித்தபடி, அறிவிப்பு வெளியிடும் வரை, எங்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.