/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய கலெக்டர்
/
நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய கலெக்டர்
ADDED : ஜூன் 24, 2025 12:21 AM
சென்னை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் உமையவள்ளி. இவர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்தார். மனு விபரம்:
வண்டலுார் அருகே உள்ள ஒத்திவாக்கம் கிராமத்தில், எனக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தின் மீதான பட்டாவை வேறு சிலரது பெயருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நான் கொடுத்த புகார்மீது விசாரணை நடத்தி, ஆறு வாரத்திற்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, 2023 அக்டோபரில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை கலெக்டர் உள்ளிட்டோர் அமல்படுத்தவில்லை.
எனவே, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி, தாசில்தார் பாலாஜி, கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கலெக்டர் தரப்பில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'மனுதாரரின் புகாரின் அடிப்படையில், அதிகாரிகளிடம் கடந்த 6, 12ம் தேதிகளில் விசாரணை நடத்தப்பட்டு, தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது' என, குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இடமாற்றம்
கடந்த மார்ச் மாதம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜுக்கு எதிராக, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தொடர்ந்து சிக்கிய நிலையில், கலெக்டர் அரண்ராஜ் நேற்று, பெரம்பலுார் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
***