ADDED : ஜன 11, 2025 12:28 AM

மாமல்லபுரம்,மாநிலத்தில் சுற்றுலா பயணியரை கவரும் வகையில், புதிய சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தவும், சுற்றுலா வளர்ச்சிக்கும் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது.
அதற்காகல 'மீடியா பாக்ஸ்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, சர்வதேச பலுான் திருவிழாவை நடத்துகிறது.
கடந்த 2015 முதல், பொங்கல் பண்டிகையின் போது, பொள்ளாச்சியில், சர்வதேச பலுான் திருவிழா நடத்துகிறது. அதனுடன் இணைந்த, தற்போது சென்னை, மதுரை ஆகிய இடங்களிலும், கூடுதலாக இவ்விழா நடத்தப்படுகிறது.
அந்த வகையில், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், இவ்விழா நேற்று துவங்கியது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர், ராட்சத பலுான்களை பறக்கவிட்டு, விழாவை துவக்கினர்.
பேபி மான்ஸ்டர், ஹ்யூகோ தி சீட்டா, வெஸ் தி வுல்ப், எலி தி எலிபென்ட் உள்ளிட்ட வடிவங்களில், வண்ண வண்ண பலுான்களை இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தாய்லாந்து, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், வியட்நாம் உள்ளிட்ட நாட்டினர், மாலை 4:30 மணி முதல், காற்று வீசும் சூழலுக்கேற்ப பறக்க விட்டனர்.
பிரத்யேக சாதனம் வாயிலாக பலுானில் காற்றை நிரப்பி, படிப்படியாக வெப்பப்படுத்தி வானிற்கு உயர்த்தி, 50 அடி உயரம் வரை அவை பறந்தன.
மாலை 5:30 மணிக்கு, ஒளிரும் பலுான் காட்சி நடந்தது. மாலை 3:00 மணி முதல், ஷாப்பிங் எக்ஸ்போ, உணவக அரங்கங்கள், சிறுவர் கேளிக்கை விளையாட்டுகள் நடந்தன; இசை நிகழ்ச்சியும் நடந்தது.
நுழைவுக்கட்டணம் தலா 200 ரூபாய். 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவசம். இதுகுறித்த விபரங்களை, www.tnibf.com என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்விழா நாளை வரை நடக்கிறது.