/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் நிர்வகிக்க அதிகாரிகள் குழு
/
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் நிர்வகிக்க அதிகாரிகள் குழு
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் நிர்வகிக்க அதிகாரிகள் குழு
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் நிர்வகிக்க அதிகாரிகள் குழு
ADDED : ஜன 11, 2024 01:31 AM
சென்னை, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நிர்வகிக்க மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் புதிய பணியிடம் உருவாக்க தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆய்வு கூட்டத்தில் தலைமை செயலர் ஷிவ் தாஸ் மீனா பிறப்பித்த உத்தரவு:
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தினசரி ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, சி.எம்.டி.ஏ., கும்டா, தாம்பரம் போலீஸ் கமிஷனர், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தமிழக நெருஞ்சாலைகள் துறை, போக்குவரத்து கழகங்கள், போக்குவரத்து ஆணையர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும். இந்த வளாகம் பிளாஸ்டிக் இல்லா மண்டலமாக அறிவிக்கப்படும்.
மேலும், பேருந்து நிலையத்தை நிர்வகிக்க மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் ஒரு பணியிடம் உருவாக்கப்படும். இவருக்கு உதவ, துணை கலெக்டர்கள் மற்றும் கூடுதல் பணியாளர்கள் அடங்கிய நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்படும்.
இவர்கள் கிளாம்பாக்கம் மட்டுமின்றி, திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையத்தையும் நிர்வகிப்பர்.
புறநகர் ரயிலுக்கு பயணியர் செல்ல ஏதுவாக, கிளாம்பாக்கத்தில் இருந்து வண்டலுார் ரயில் நிலையத்துக்கு சுற்று முறையில் பேருந்துகளை இயக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்த தணிக்கையில் குறிப்பிடப்பட்ட அனைத்து வசதிகளையும் செய்ய சி.எம்.டி.ஏ.,வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பின் ஆம்னி, அரசு பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.