/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறந்து ஓராண்டு நிறைவு; இணைப்பு வசதிகளை எதிர்பார்க்கும் பயணியர்
/
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறந்து ஓராண்டு நிறைவு; இணைப்பு வசதிகளை எதிர்பார்க்கும் பயணியர்
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறந்து ஓராண்டு நிறைவு; இணைப்பு வசதிகளை எதிர்பார்க்கும் பயணியர்
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறந்து ஓராண்டு நிறைவு; இணைப்பு வசதிகளை எதிர்பார்க்கும் பயணியர்
UPDATED : டிச 31, 2024 06:33 AM
ADDED : டிச 31, 2024 12:53 AM

சென்னை: வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், நடை மேம்பாலம் உள்ளிட்ட இணைப்பு வசதிகள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கான பணிகளை சி.எம்.டி.ஏ., முடுக்கிவிட வேண்டும் என்று, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 40 ஏக்கர் நிலத்தில், 400 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தை, 2023 டிச., 30ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட வெளியூர் பேருந்துகள், படிப்படியாக கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டன. ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாறுவதில், சில பிரச்னைகள் ஏற்பட்டன. தற்காலிகமாக, கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைக்க வசதியாக, வெளிவட்ட சாலையில், முடிச்சூரில் பேருந்து நிறுத்துமிடம் கட்டப்பட்டு, சமீபத்தில் திறக்கப்பட்டது. இருப்பினும், நீதிமன்ற அனுமதி உள்ளது என்று கூறி, பெரும்பாலான ஆம்னி பேருந்துகள், கிளாம்பாக்கத்துக்கு மாறாமல் உள்ளன.
அதேநேரம், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மக்கள் கிளாம்பாக்கம் செல்ல, இணைப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.
ரயில் நிலையம்
இருப்பினும், மெட்ரோ, மின்சார ரயில் வசதிகள் இல்லாதது, மக்கள் மத்தியில் பெரிய குறையாக உள்ளது. இப்போதும் பொது மக்கள், வண்டலுார் வரை மின்சார ரயிலில் சென்று, அங்கிருந்து கிளாம்பாக்கத்துக்கு, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை தேடி அலைய வேண்டியுள்ளது.
புறநகர் மின்சார ரயில்கள் வாயிலாக, மக்கள் எளிதாக வந்து செல்ல, சி.எம்.டி.ஏ., - போக்குவரத்து குழுமம், தெற்கு ரயில்வே ஆகியவை இணைந்து, கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாயில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடிய இன்னும் ஓராண்டு ஆகும் என கூறப்படுகிறது.
நடை மேம்பாலம்
கிளாம்பாக்கம் ரயில் நிலையம், ஜி.எஸ்.டி., சாலை, பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில், நவீன வசதிகளுடன், 75 கோடி ரூபாயில் நடை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை துவக்கியது.
நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு கோரிய வழக்கில், நீதிமன்ற தடை காரணமாக பணிகள் முடங்கியுள்ளன.
மெட்ரோ ரயில்
இதேபோன்று, விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை துவங்குவதற்கான பணிகளும் இன்னும் நடக்கவில்லை. இதற்கான விரிவான திட்ட அறிக்கை, அடுத்த கட்டத்துக்கு நகராமல் உள்ளது.
சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பயணியருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. எவ்வித பிரச்னையும் இன்றி, மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். மாநகர பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவதால், மக்கள் வருவதில் பாதிப்பு இல்லை.
அதே நேரம், நடை மேம்பாலம், ரயில் நிலையம் உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.