/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அ.தி.மு.க., பெண் கவுன்சிலரை தாக்கியதாக தி.மு.க.,வினர் மீது புகார்
/
அ.தி.மு.க., பெண் கவுன்சிலரை தாக்கியதாக தி.மு.க.,வினர் மீது புகார்
அ.தி.மு.க., பெண் கவுன்சிலரை தாக்கியதாக தி.மு.க.,வினர் மீது புகார்
அ.தி.மு.க., பெண் கவுன்சிலரை தாக்கியதாக தி.மு.க.,வினர் மீது புகார்
ADDED : செப் 22, 2025 10:17 PM
சென்னை;மழைநீர் வடிகால்வாய் அமைப்பதை தட்டிக்கேட்ட அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவரை தாக்கிய தி.மு.க.,வினர் மீது புகார் அளிக்கப்பட்டது.
சென்னை அருகே, திருநின்றவூர் நகராட்சி 21வது மற்றும் 27வது வார்டுக்குட்பட்ட, அன்னை இந்திரா நகர் அனெக்ஸ் பகுதியில், 2,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, 30 ஆண்டுகளுக்கு மேலாக மழைநீர் வடிகால் இல்லாததால், பருவமழையின்போது வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 27வது வார்டு பகுதியில் நடக்கும் மழைநீர் வடிகால் பணியால், அன்னை இந்திரா நகர் அனெக்ஸ் பகுதியில், வெள்ள பாதிப்பு அதிகரிக்கக்கூடும் எனக்கூறி, 21வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் அனிதா, 58, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, அப்பணியை நிறுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆனால், கடந்த 20ம் தேதி இரவு, 27வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஜெயக்குமார் முன்னிலையில், அங்கு மழைநீர் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது.
இதை அ.தி.மு.க., கவுன்சிலர் அனிதா மற்றும் அவரது கணவர் அழகேசன், 61, தட்டிக்கேட்டனர். இதனால், ஆத்திரம் அடைந்த, அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் தங்கமணி, அவரது மகன் செந்தில், மகள் சுஜாதா, பேரன் சச்சின், 26, ஆகியோர், அ.தி.மு.க., கவுன்சிலர் அனிதா, அவரது கணவர் அழகேசன் இருவரையும் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருநின்றவூர் போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க., சார்பில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலர் அலெக்சாண்டர் மற்றும் நிர்வாகிகள், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து, அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவரை தாக்கிய, தி.மு.க., நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று புகார் மனு அளித்தனர்.