/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தட்டுப்பாடுள்ள பகுதிகளில் குடிநீர் சப்ளை பாதிப்பு திண்டாட்டம் போலீசார் அபராதம் விதித்து லாரிகளை முடக்குவதாக புகார்
/
தட்டுப்பாடுள்ள பகுதிகளில் குடிநீர் சப்ளை பாதிப்பு திண்டாட்டம் போலீசார் அபராதம் விதித்து லாரிகளை முடக்குவதாக புகார்
தட்டுப்பாடுள்ள பகுதிகளில் குடிநீர் சப்ளை பாதிப்பு திண்டாட்டம் போலீசார் அபராதம் விதித்து லாரிகளை முடக்குவதாக புகார்
தட்டுப்பாடுள்ள பகுதிகளில் குடிநீர் சப்ளை பாதிப்பு திண்டாட்டம் போலீசார் அபராதம் விதித்து லாரிகளை முடக்குவதாக புகார்
ADDED : மே 05, 2025 10:55 PM

சென்னை :கோடை காலம் துவங்கி, குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், பல பகுதிகளிலும் குடிநீீரை சரியாக வினியோகிக்க முடியாமல் குடிநீர் வாரியம் திணறி வருகிறது. வாரிய ஒப்பந்த லாரிகளை நிறுத்தி, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து, சாலையோரங்களில் முடக்குவதால், குடிநீர் வினியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பத்து நாட்களில், 22 லாரிகள் முடக்கப்பட்டுள்ளன.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள், 13.2 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை. இதில், சென்னை மக்களின் தாகம் தீர்க்க, மாதம் 1 டி.எம்.சி., நீர் தேவை. தற்போது ஆறு ஏரிகளிலும் சேர்த்து, 8.30 டி.எம்.சி., நீர்இருப்பு உள்ளது.
இந்த ஏரிகளில் இருந்து குழாய் வாயிலாக, சென்னை குடிநீர் வாரியம் சார்பில், தினமும் 107 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
எனினும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் சிரமம் இருப்பதால், மடிப்பாக்கம், திருவொற்றியூர், பெரம்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில், குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை தலைதுாக்கி உள்ளது.
பெருங்குடி மண்டலம், வார்டு 187க்கு உட்பட்ட மடிப்பாக்கத்தில் மெட்ரோ துறையின் குடிநீர் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. ஆனால், வீடுகளுக்கு இணைப்பு வழங்கவில்லை.
இங்குள்ள கார்த்திகேயபுரம் தெருவில் இரண்டு குடிநீர் தொட்டிகளின் வால்வுகள் உடைந்துள்ளன. வாரியம் சார்பில், ஒப்பந்த லாரிகள் குடிநீர் நிரப்பாததால், பகுதிவாசிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இங்கு மட்டுமின்றி, மேலும் சில பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்தில் சிக்கல் இருப்பதால், ஒப்பந்த லாரிகள் வாயிலாக குடிநீர் வழங்கும் பணியை, வாரியம் மேற்கொண்டுள்ளது.
அதாவது, தினமும் 20 கோடி லிட்டர், 450 லாரிகள் வழியாக, குடிநீர் இணைப்பு இல்லாத தெருக்கள், சாலையோர தொட்டிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வினியோகித்து வருகிறது.
கோடை வெயிலால் குடிநீர் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், போக்குவரத்து போலீசார் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி, குறிப்பிட்ட சில பகுதிகளில் காலை, மாலை நேரத்தில் குடிநீர் லாரிகள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
குறிப்பாக, ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட கண்ணப்பர் திடல் நீரேற்று நிலையம், கோடம்பாக்கம் மண்டலம், வள்ளுவர்கோட்டம் நீரேற்று நிலையம் மற்றும் அண்ணா நகர் மண்டலம், கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையங்களில் இருந்து செல்லும் லாரிகளை போலீசார் ஆங்காங்கே நிறுத்தி, அபராதம் விதிக்கின்றனர்.
தவிர, சாலையோரம் வாகனங்களை நிறுத்துகின்றனர். அந்த வகையில், 10 நாட்களில் 22 லாரிகளுக்கு, தலா, 2,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரிய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர் கூறியதாவது:
கண்ணப்பர் திடல், வள்ளுவர்கோட்டம், கீழ்ப்பாக்கம் ஆகிய நீரேற்று நிலையங்களில் இருந்து, 6,000, 9,000 மற்றும் 16,000 லிட்டர் கொள்ளளவு உடைய, 88 லாரிகள் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கோடையில் தண்ணீர் தேவை அதிகமாக இருப்பதால், முன்பை விட லாரிகள் நடை அதிகமாக உள்ளது.
பல பகுதிகளில், காலை 8:00 முதல் 12:00 வரை மற்றும் மாலை 3:00 முதல் 8:00 மணி வரை குடிநீர் வினியோகம் செய்ய போலீசார் அனுமதிப்பதில்லை.
இந்த நேரத்தில் செல்லும் குடிநீர் லாரிகள் மீது போக்குவரத்து போலீசார், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். இதனால், தாமதமாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
பொதுமக்கள், முறையாக குடிநீர் வினியோகிப்பதில்லை என, லாரி உரிமையாளர்கள் மீது குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கின்றனர். கோடையை கருத்தில் கொண்டு, தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய போலீசார் மற்றும் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தவிர்க்க முடியாததால்
அபராதம் போடுறோம்
அனைத்து சாலைகளிலும் தடை செய்யவில்லை. நெரிசல் அதிகம் உள்ள சாலைகளில், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் மட்டும் லாரிகளை குறைந்த எண்ணிக்கையில் இயக்க வலியுறுத்தி உள்ளோம்.
தவிர்க்க முடியாமல் சில நேரம் அபராதம் விதிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. குடிநீர் வினியோகத்துக்கு தடையாக நாங்கள் இல்லை.
- போக்குவரத்து போலீசார்
சரியாக வினியோகம்
செய்ய முடியவில்லை
சென்னையின் பல பகுதிகளில், லாரி குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் உள்ளது. பள்ளம் எடுத்த சாலைகளை மூடாதது, போக்குவரத்து போலீசார் கெடுபிடி உள்ளிட்ட காரணங்களால், பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் குடிநீர் வினியோகிக்க முடியவில்லை. போலீஸ் உயர் அதிகாரியிடம் பேசி உள்ளோம்.லை
- குடிநீர் வாரிய அதிகாரிகள்

