/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடியிருப்பு மாணவ - மாணவியருக்கு நடமாடும் வாகனத்தில் கணினி பயிற்சி
/
குடியிருப்பு மாணவ - மாணவியருக்கு நடமாடும் வாகனத்தில் கணினி பயிற்சி
குடியிருப்பு மாணவ - மாணவியருக்கு நடமாடும் வாகனத்தில் கணினி பயிற்சி
குடியிருப்பு மாணவ - மாணவியருக்கு நடமாடும் வாகனத்தில் கணினி பயிற்சி
ADDED : மே 22, 2025 12:10 AM

சென்னை கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 56,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. வரும் கல்வியாண்டு முதல், அங்கு குடியிருக்கும் அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்லும் வகையில், கல்வித்துறையும், சமுதாய வளர்ச்சி பிரிவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இங்குள்ள பெரும்பாலான பெற்றோர், மாநகராட்சி, தனியார் நிறுவனங்களில் துாய்மை பணி மற்றும் இதர வேலைகள், வியாபாரம் செய்கின்றனர்.
அவர்கள், குழந்தைகளை கவனிக்க முடியாததால், கோடை விடுமுறையில் அவர்கள் வாழ்க்கை திசைமாறி செல்ல வாய்ப்பு உள்ளது.
இதனால், விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்ற, தன்னார்வ அமைப்புகள் வாயிலாக, கணினி பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு, அட்டோஸ் பிரேயஸ் மற்றும் என்.ஐ.ஐ.டி., ஆகிய அமைப்புகள் முன்வந்தன.
இந்த அமைப்புகள் சார்பில், நடமாடும் கணினி வாகனத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் ஒருங்கிணைப்பாளர் எட்வர்ட் கூறியதாவது:
அரசு பள்ளி, வாரிய குடியிருப்புகளில் அடிப்படை கணினி பயிற்சி வழங்குகிறோம். ஆன்லைன் பயன்பாடு, விண்ணப்பிப்பது, வங்கி நடவடிக்கைகள் தொடர்பாக கற்று கொடுக்கிறோம்.
'ஏசி' வசதியுள்ள வாகனத்தில், 16 கணினிகள் உள்ளன. தினமும் ஒரு மணி நேரம் வீதம், 20 நாட்கள் பயிற்சி வழங்கப்படும்.
நாளொன்றுக்கு, 112 பேருக்கு வழங்குகிறோம். சான்றிதழ் வழங்கப்படும். பள்ளி திறந்த பின், காலை முதல் மதியம் வரை, அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கும், மாலை குடியிருப்பு பகுதியில் விரும்பம் உள்ள நபர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளோம்.
இதன் வாயிலாக, புதிய வேலை வாய்ப்பும், ஏற்கனவே வேலை செய்வோர் அடுத்த நிலைக்கும் செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.