/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரியில் உள்வாங்கிய சாலை சீரமைக்க கட்டுமான நிறுவனம் 'ரெடி'
/
வேளச்சேரியில் உள்வாங்கிய சாலை சீரமைக்க கட்டுமான நிறுவனம் 'ரெடி'
வேளச்சேரியில் உள்வாங்கிய சாலை சீரமைக்க கட்டுமான நிறுவனம் 'ரெடி'
வேளச்சேரியில் உள்வாங்கிய சாலை சீரமைக்க கட்டுமான நிறுவனம் 'ரெடி'
ADDED : ஆக 29, 2025 12:17 AM

வேளச்சேரி, வேளச்சேரியில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டிய போது, சாலை உள்வாங்கியது. ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வுக்கு பின், கட்டுமான நிறுவனம் சாலையை புதுப்பித்து கொடுக்க முன்வந்துள்ளது.
அடையாறு மண்டலம், 178வது வார்டு, சேஷாத்ரிபுரம் பிரதான சாலை, 300 மீட்டர் நீளம், 40 அடி அகலம் கொண்டது. இந்த சாலையை ஒட்டி, 3 ஏக்கர் தனியார் இடத்தில், 'ஐரா' என்ற நிறுவனம் அடுக்குமாடி கட்டடம் கட்டி வருகிறது.
இதற்காக, கடந்த மாதம், தரைத்தளத்தில் இருந்து, 60 அடி ஆழத்தில் பேஸ்மென்ட் போட, ராட்சத இயந்திரத்தால் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில் விரிசல் விழுந்து, ஒருபுறம் சாய்வாக உள்வாங்கியது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் பள்ளம் தோண்டியதாக, கட்டுமான நிறுவனம் மீது, மாநகராட்சி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். மேலும், நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அப்பகுதி மக்கள் வேறு சாலை வழியாக சென்றதால், சேஷாத்ரிபுரம் பிரதான சாலையை சீரமைத்து தர வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். மாநகராட்சியும் சாலையை சீரமைக்க, கட்டுமான நிறுவனத்தை வலியுறுத்தியது.
இந்நிலையில், ஐ.ஐ.டி., வல்லுனர் குழுவினர், கட்டுமான பணி மற்றும் சாலை பகுதிகளை ஆய்வு செய்தனர். அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், சாலையை சீரமைக்க கட்டுமான நிறுவனம் முன்வந்தது.
பள்ளத்தில் மண் கொட்டி, சாலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு வாரத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து, சாலை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.