ADDED : டிச 02, 2024 01:41 AM

மணலி:'பெஞ்சல்' புயல் காரணமாக, எண்ணுார் துறைமுகம், இரு நாட்களாக செயல்படவில்லை. இதனால், கன்டெய்னர் லாரிகள் அனுமதிக்கப்படாததால், மாதவரம், மணலி சாலையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன.
நேற்று, புயல் கரையை கடந்ததை அடுத்து, துறைமுகத்தில் கன்டெய்னர் பெட்டிகள் கையாளும் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன.
மாதவரம், மணலி, மீஞ்சூர், பொன்னேரி, மணலிபுதுநகர், விச்சூரில் செயல்படும், சரக்கு பெட்டக முனையங்களில் இருந்து, ஒரே நேரத்தில் கன்டெய்னர் லாரிகள் வெளியேறி, துறைமுகம் நோக்கி சென்றன.
இதனால், மாதவரம் விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி விரைவு சாலை, எண்ணுார் விரைவு சாலை உள்ளிட்ட சாலைகளில், பல கி.மீ., துாரம் கன்டெய்னர்கள் அணிவகுத்து நின்றன.
துறைமுகத்திற்குள், கிரேன் கையாளும் ஊழியர்கள் புதியவர்கள் என்பதால், வேலை தாமதமாவதாக தெரிகிறது. விரைந்து பணிகள் மேற்கொண்டால், கன்டெய்னர் போக்குவரத்து நெரிசல் குறையும் என, போலீசார் கூறினர்.
துறைமுக அதிகாரி கூறுகையில்:
துறைமுகத்தில், 15 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்பட்சத்தில் மட்டுமே, கன்டெய்னர் பெட்டிகள் கையாளும் பணி மேற்கொள்ள முடியும். புயல் காரணமாக, அப்பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. நேற்று அதிகாலை, 4:15 மணி முதல் மீண்டும் பணிகள் துவங்கியுள்ளன.
வழக்கமாக, 50 - 60 கன்டெய்னர் லாரிகளை கையாள முடியும். தற்போது 25 லாரிகள் மட்டுமே கையாள முடிகிறது. மதியத்திற்கு பின், பணி வேகமெடுத்துள்ளது. இரவுக்குள் இயல்பு நிலை திரும்பி விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.