தொடரும் மின் வெட்டு; வாரிய அலுவலர்கள் சிறைபிடிப்பு
தொடரும் மின் வெட்டு; வாரிய அலுவலர்கள் சிறைபிடிப்பு
ADDED : மே 24, 2026 01:33 AM

சென்னை: தொடரும் மின் வெட்டால் அவதியடைந்துள்ள மக்கள், நேற்று காலை மின் வாரிய அலுவலர்களை சிறைபிடித்தனர். அதேபோல் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சென்னையில் சில வாரங்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள், போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை ஆங்காங்கே நடத்தி வருகின்றனர்.
இரு நாட்களுக்கு முன், பகல் மற்றும் இரவு நேரத்தில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டதால், சென்னையின் பல பகுதிகளில் நள்ளிரவில் போராட்டம் நடத்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை மற்றும் பகலில் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், தண்டையார்பேட்டை, தண்டையார் நகர் பிரதான தெருவில் நேற்று முன்தினம் மின்சாரம் இல்லை. குழந்தைகள், முதியோர், பெரியோர் துாங்க முடியாமல் சிரமங்களை சந்தித்தனர்.
இந்நிலையில், மின் தடையை சரி செய்ய வந்த இரு மின் அலுவலர்களை, பகுதிமக்கள் சிறைபிடித்து, காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். தகவலறிந்து வந்த போலீசார், பகுதிமக்களிடம் பேச்சு நடத்தி அவர்களை மீட்டு சென்றனர்.
தெருவில் துாக்கம் ராயபுரம், கொடிமரத் தெரு, பென்டன் தெரு, ஏ.ஜே., காலனி ஆகிய தெருக்களில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மின்தடை ஏற்பட்டது.
மின் தடை குறித்து, அப்பகுதி மக்கள், ராயபுரம் பனைமரத் தொட்டியில் உள்ள மின்சார அலுவலகத்தை மொபைல் போனிலும், தொலைபேசிலும் மாறி மாறி தொடர்பு கொண்டபோதும், அலுவலர்கள் அழைப்புகளை ஏற்கவில்லை.
இதனால் பெண்கள், தங்களது குழந்தைகளுடன், தெருக்களில் படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டது. தொடர் மின் தடையால், தண்ணீர் இல்லாமல் கழிப்பறைக்கு செல்ல முடியாமல், பெண்கள் அவதியடைந்தனர். நேற்று காலை 7:20 மணிக்கு மின்சாரம் வந்தது.
நள்ளிரவில் மறியல் எண்ணுார் - காசிகோவில் குப்பம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது. நள்ளிரவு 12:00 மணியாகியும் மின் நிலைமை சீராகவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், எண்ணுார் விரைவு சாலையில், மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியே இரு வழித்தடத்திலும், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எண்ணுார் போலீசார், அவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர்.
பகுதிமக்கள், 'தொடர் மின்தடையை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின் வாரிய அதிகாரிகளுக்கு அழைத்தால், போன் எடுப்பது கிடையாது. மீறி எடுத்தால், அலட்சியமாக பதிலளிக்கின்றனர். மின் நிலைமையை சரி செய்தால் மட்டுமே, இங்கிருந்து கலைந்து செல்வோம்' என்றனர்.
போலீசார், மின் வாரிய ஊழியர்களிடம் பேசியதை அடுத்து, நிலைமை சீரானது. மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
மின் கம்பி அறுந்தது பட்டாபிராம் அடுத்த சோராஞ்சேரி, அணைக்கட்டு சேரி, அமுதுார் மேடு, ஜெ.ஜெ., நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சேக்காடு துணை மின் நிலையத்தில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் 'பீடர்' எனும் மின்னுாட்டியில் கோளாறு ஏற்பட்டு பல இடங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக இரவு 10:00 மணிக்கு மேல் ஏற்படும் திடீர் மின் வெட்டால், பொதுமக்கள் உஷ்ணத்தில் அவதிப்படுகின்றனர்.
அந்த கோளாறை சரி செய்து, மீண்டும் சீரான மின்சாரம் பெற இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. தவிர, மின் சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதால், அணைக்கட்டு சேரி, அமுதுார் மேடு, ஜெ.ஜெ., நகர் பகுதிகளில் தினமும் மின்வெட்டு ஏற்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை வறண்ட வானிலை நிலவியது. பலத்த காற்று வீசியதால் 6:30 மணிக்கு அணைக்கட்டுசேரி, சிவன் கோவில் அருகே உயரழுத்த மின்கம்பி அறுந்து மின்வெட்டு ஏற்பட்டது.
ஊழியர்கள் அவற்றை சரி செய்த பின், காலை 9:30 மணிக்கு மின் சேவை சீரானது. மின்வெட்டால், குடிநீர் பிடிக்க முடியாமல், மூன்று மணி நேரம் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
