/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணி முடிக்க தாமதம் ஏற்பட்டால் தினசரி ரூ.10,000 வீதம் அபராதம் ஒப்பந்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
/
பணி முடிக்க தாமதம் ஏற்பட்டால் தினசரி ரூ.10,000 வீதம் அபராதம் ஒப்பந்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
பணி முடிக்க தாமதம் ஏற்பட்டால் தினசரி ரூ.10,000 வீதம் அபராதம் ஒப்பந்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
பணி முடிக்க தாமதம் ஏற்பட்டால் தினசரி ரூ.10,000 வீதம் அபராதம் ஒப்பந்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஜூலை 29, 2025 12:38 AM
அடையாறு, 'சாலை, வடிகால்வாய் பணிகளை முடிக்காமல் காலதாமதம் ஏற்படுத்தினால், தினமும் 10,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்' என, ஒப்பந்த நிறுவனங்களுக்கு, தெற்கு வட்டார துணை கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.
மாநகராட்சியின் தெற்கு வட்டார துணை கமிஷனராக அதாப் ரசூல், சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவர், அடையாறு மண்டலத்தின் செயல்பாடுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து அறிய, கவுன்சிலர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதில், மண்டல தலைவர் துரைராஜ் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, கவுன்சிலர்கள் பேசியதாவது:
மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக வேளச்சேரி, தரமணி, கிண்டி, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், கோட்டூர்புரம் உள்ளிட்டவை உள்ளன.
அப்பகுதிகளில், சாலை, வடிகால்வாய் பணிகளை, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முடித்தால் தான், பருவ மழையை சமாளிக்க முடியும். இணைப்பு இல்லாமல், வடிகால்வாய்கள் ஆங்காங்கே துண்டு துண்டாக நிற்கின்றன. பணிகளை தரமாகவும் செய்வதில்லை.
சாலையை சுரண்டி விட்டு, மாதக்கணக்கில் அப்படியே போட்டு விடுகின்றனர். கேட்டால் வேறு இடத்தில் பணி முடிந்தால் தான், இங்கு செய்ய முடியும் என, ஒப்பந்த நிறுவனங்கள் அலட்சியமாக பதில் கூறுகின்றன. பூஜை போட்டு பல மாதமாகியும், பணிகள் துவக்கப்படாத இடங்களும் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதை தொடர்ந்து, துணை கமிஷனர் ஒப்பந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டார். முறையாக பதில் கூறாமல், மழுப்பலாக கூறியதால் கடும் கோபம் அடைந்தார்.
தொடர்ந்து, 'பணியை குறிப்பிட்ட நாளில் துவங்கி, அதற்குரிய கால அவகாசத்தில் முடிக்காவிட்டால், தினமும் 10,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி நடந்து கொண்டால், நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்படும்' என, துணை கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.