/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகாலில் துார்வாரிய சகதி கழிவை முறையாக அகற்றாத ஒப்பந்ததாரர்கள்
/
வடிகாலில் துார்வாரிய சகதி கழிவை முறையாக அகற்றாத ஒப்பந்ததாரர்கள்
வடிகாலில் துார்வாரிய சகதி கழிவை முறையாக அகற்றாத ஒப்பந்ததாரர்கள்
வடிகாலில் துார்வாரிய சகதி கழிவை முறையாக அகற்றாத ஒப்பந்ததாரர்கள்
ADDED : அக் 02, 2024 12:23 AM

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில் பெரும்பாலான மழைநீர் வடிகால் கழிவுநீர் கால்வாயாகவும், குப்பை கொட்டும் களமாகவும் மாற்றப்பட்டுள்ளன.
இதனால், பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வடிந்தோடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டு மழைக்காலத்திலும், வடிகாலில் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக, துார்வாரப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பருவமழையின் போது, தென்சென்னையில் குறிப்பாக பெருங்குடி மண்டலத்தில், கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு வடிகாலில் எடுக்கப்பட்ட சகதி, கழிவு, மண் மூட்டைகள் முறையாக அகற்றாததால், மீண்டும் வடிகாலில் கரைந்ததும் ஒரு காரணம்.
இந்த ஆண்டும், தொடர் மழையால் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, பெருங்குடி மண்டலத்தில் துார் வாரும் பணி சில மாதங்களுக்கு முன்பே துவக்கப்பட்டது.
அப்போது ஒப்பந்ததாரர்களுக்கு, வடிகாலில் எடுக்கப்படும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டது. முறையாக அகற்றாத ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்க வேண்டிய தொகை பிடித்தம் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டது.
வழக்கம் போல இந்தாண்டும் மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் உள்ளிட்ட மண்டல முழுதும், வடிகாலில் வாரப்படும் கசடுகள், பிளாஸ்டிக் சாக்கு பைகளில் சேகரிக்கப்படுகின்றன.
அவை, அந்தந்த வடிகால் மேல் வைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை உடனுக்குடன் அகற்றவில்லை. மாதக்கணக்கில் அங்கேயே கிடப்பில் உள்ளன. இதனால், அவை வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கொசுத்தொல்லையும் அதிகரித்தது. துர்நாற்றமும் வீசி வருகிறது.
அவ்வப்போது பெய்யும் மழையால், சாக்குப் பையில் உள்ள கசடுகள் கரைந்து, மீண்டும் வடிகாலில் விழுகின்றன. இதனால், பெருங்குடி மண்டலத்தில் மீண்டும் பருவமழையின் போது, வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மண்டலம் முழுதும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயரதிகாரி நேரில் ஆய்வு செய்ய வேண்டும். வடிகால் மேல் பிளாஸ்டிக் பைகளில் கழிவுகளை வைத்துள்ள ஒப்பந்ததாரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை நிறுத்தி வைக்க வேண்டும்.
மீண்டும் அந்த வடிகாலில் துார் வாரி, கசடுகளை முழுமையாக அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
- -நமது நிருபர் --