/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை அகற்றும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு
/
குப்பை அகற்றும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு
ADDED : மார் 16, 2025 10:09 PM
சென்னையில் பொது இடங்களில் குப்பையை அகற்றும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள ரோந்து வாகனங்களுக்கு, புதிய கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில், பொது இடங்கள், திறந்தவெளி இடங்களில், குப்பை, கட்டட கழிவு கொட்டுவதை கண்காணித்து, அகற்றும் வகையில், 47 ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
இதன் வாயிலாக, பொது இடங்களில் குப்பை, கட்டட கழிவு கொட்டியவர்களிடம் இருந்து, ஐந்து மாதங்களில், 1.59 கோடி ரூபாயை மாநகராட்சி வசூலித்து உள்ளது. இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, போலீசிலும் புகார் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
* குப்பை தொட்டி நிரப்பி வழிந்தாலும், அதை சுற்றி குப்பை இருந்தாலும், வாக்கி டாக்கி வாயிலாக, சம்பந்தப்பட்ட துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு தெரிவித்து, அகற்ற வைக்க வேண்டும்
* அதிக குப்பை சேரும் இடங்களை கண்டறிந்தும், சாலை மைய தடுப்பு, சாலை ஓரங்களில் அதிக மண் சேர்ந்து இருப்பது பற்றியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்
* பேருந்து நிழற்குடை மேற்கூரை சேதமடைந்து இருந்தாலும், போஸ்டர்கள் ஒட்டப்பட்டும், அழுக்கு படிந்திருத்தாலும், சுற்றி குப்பை, கட்டட கழிவு இருந்தாலும், அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்
* நடைபாதை ஆக்கிரமிப்பு பற்றி தெரிவிக்க வேண்டும்; போஸ்டர்கள், பதாகைகள் இருந்தால், அகற்ற நடவடிக்கை எடுப்பது முக்கியம்
* பொது கழிப்பறை கதவுகள் உடைந்திருந்தாலும், முறையாக பராமரிக்காமல் இருந்தாலும் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
* கூவம், அடையாறு, பகிங்ஹாம் கால்வாய்களை தொடர்ந்து கண்காணித்து, குப்பை, கட்டட கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும். அவ்வாறு கொட்டினால், அபராதம் மற்றும் போலீசில் புகார் அளிப்பது அவசியம்
* மெட்ரோ ரயில் பணிகளில் ஈடுபடும் வாகனங்கள், மாநகராட்சி வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற தவறினாலும், கட்டட கழிவு வாகனங்கள் வலையின்றி சென்றாலும், டயர்களில் மண் படிந்திருந்து சாலையில் முழுதும் துாசி பரவினாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
* ரோந்து வாகனங்களில் கண்காணிப்பு குழு, வாகன பதிவேடு பராமரிக்க வேண்டும். அவற்றில் தினமும் கையெழுத்திடுவதுடன், புகார்கள் பதிவு, நடவடிக்கை விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும்
* இந்த பதிவேட்டை மண்டல அலுவலர்கள் மாதம் ஒருமுறை ஆய்வு செய்வர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வரும் காலங்களில்
பிரச்னை தீரும்
திடக்கழிவு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள, 289 இலகுரக மற்றும் கனரக குப்பை வாகனங்களில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு உள்ளது.
ஆரம்பத்தில் சில வாகனங்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லாமல் தாமதமானது. தொடர் நடவடிக்கைகளால், அப்பிரச்னை சரி செய்யப்பட்டுள்ளது.
அனைத்து ரோந்து வாகனங்களிலும், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி கண்காணிக்கப்படும்.
ஐந்து மாத தொடர் நடவடிக்கையால், குப்பை பிரச்னை தொடர்பான புகார்கள் குறைந்துள்ளன. தீவிர நடவடிக்கையால், வரும் காலங்களில் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
- ஜெ.குமரகுருபரன்,
கமிஷனர்,
சென்னை மாநகராட்சி
- நமது நிருபர் -