/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட மாநகராட்சி திட்டம்
/
ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட மாநகராட்சி திட்டம்
ADDED : ஆக 15, 2025 12:22 AM
சென்னை, சென்னையின் இழந்த பசுமையை மீட்டெடுக்க, இந்த ஆண்டு, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக, சாலை விரிவாக்கம், மேம்பாலம் கட்டுவது, புதிய கட்டுமானங்கள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைக்கப்படுகின்றன.
விரிவாக்க மண்டலங்களில், புதிய வடிகால், கால்வாய், குடிநீர், கழிவுநீர் திட்டங்கள் நடைபெறுகின்றன. இதற்காக, பல இடங்களில் சிறியது முதல் 50, 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் வரை வெட்டப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
இழந்த பசுமையை மீட்டெடுக்க, இந்த ஆண்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
'மகிழம், கடம்பா, செண்பகம், மகோகனி, பூவரசு, புங்கம், புன்னை, நீர்மருது' உள்ளிட்ட, 20 வகையான நாட்டு மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மரக்கன்றுகள் நடுவதை விட, அதை குறிப்பிட்ட உயரம் வளர்வது வரை, தொடர்ந்து பராமரித்து, கண்காணிக்க வேண்டும். இதற்கு, தன்னார்வ அமைப்புகளின் உதவியை நாடி உள்ளோம்.
பூங்கா, மயானம், சாலையோரம், சாலை மைய பகுதி, மைதானம், ஏரி, குளக்கரைகள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து, 20,000 மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.
தனியார் இடங்களில் மரங்கள் வளர்க்க விரும்பினால், மாநகராட்சி பூங்கா துறையை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
**