/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜி.எஸ்.டி., எண் வைத்துள்ளோருக்கு தொழில் வரி கட்டாயம் வருவாயை பெருக்க மாநகராட்சி கிடுக்கிப்பிடி
/
ஜி.எஸ்.டி., எண் வைத்துள்ளோருக்கு தொழில் வரி கட்டாயம் வருவாயை பெருக்க மாநகராட்சி கிடுக்கிப்பிடி
ஜி.எஸ்.டி., எண் வைத்துள்ளோருக்கு தொழில் வரி கட்டாயம் வருவாயை பெருக்க மாநகராட்சி கிடுக்கிப்பிடி
ஜி.எஸ்.டி., எண் வைத்துள்ளோருக்கு தொழில் வரி கட்டாயம் வருவாயை பெருக்க மாநகராட்சி கிடுக்கிப்பிடி
ADDED : நவ 27, 2024 11:43 PM

சென்னை, :சென்னையில் வணிகம் செய்வதற்கான ஜி.எஸ்.டி., எண் வைத்திருக்கும் அனைவரும் தொழில் வரி செலுத்துவதை, சென்னை மாநகராட்சி கட்டாயமாக்கியுள்ளது. மாநகராட்சியின் வருவாயை பெருக்க, தங்களிடம் உள்ள விபரங்கள் அடிப்படையில், விடுபட்டோரை தேடி பிடித்து, தொழில் வரி செலுத்த அவர்களின் மொபைல் போன்களில் அறிவுறுத்தப்படுகிறது.
தொழில்வரி செலுத்துவதில் ஏமாற்றுவோரை கண்டறிந்து கிடுக்கிப்பிடி போடும் வகையில், ஜி.எஸ்.டி., எண் பெற்றவர்களின் விபரங்களை, ஜி.எஸ்.டி., கவுன்சிலிடம் கோரப்பட்டுள்ளது.
ரூ.1,800 கோடி
சென்னை மாநகராட்சியின் நிதி வருவாயில் சொத்து வரி, தொழில் வரி பிரதானமாக உள்ளது. அதன்படி, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, ஆண்டுக்கு 1,800 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், மாநகராட்சியில் பதிவு செய்த சிறிய கடைகள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களிடம் இருந்து, 550 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், முத்திரைதாள் மீதான வரியில் 300 கோடி ரூபாய் ஈட்டப்படுகிறது.
வரி வருவாயுடன் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியம், உலக வங்கி கடனுதவி உள்ளிட்டவற்றின் வாயிலாக, மாநகராட்சியின் கட்டமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் ஊதியம், சாலை சீரமைப்பு, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றுதல், உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இந்த வருவாய் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன், தொழில் வரியை மாநகராட்சி உயர்த்தியது. அதன்படி, 21,001 முதல் 30,000 ரூபாய் மாதவருவாய் உள்ளவர்களுக்கு, 135 ரூபாயிலிருந்து, 180 ரூபாயாக தொழில் வரி உயர்த்தப்பட்டது.
அதேபோல், 30,001 முதல் 45,000 ரூபாய் வரை உள்ளவர்களுக்கு, 315 ரூபாயிலிருந்து 430 ரூபாய்; 45,001 முதல் 60,000 ரூபாய் உள்ளவர்களுக்கு, 690லிருந்து 930ரூபாய் வரை வரி உயர்த்தப்பட்டது.
அதேநேரம், 60,001 முதல் 75,000 மற்றும் அதற்கு மேல், 1,250 ரூபாய் என, பழைய வரியே வசூலிக்கப்பட்டு வருகிறது. குறைந்த சம்பளம் வாங்குவோருக்கு உயர்த்தப்பட்ட தொழில் வரி, அதிக சம்பளம் வாங்குவோருக்கு உயர்த்தப்படாதது விமர்சனத்துக்குள்ளானது.
மும்முரம்
இந்நிலையில், மாநகராட்சியில் தொழில் வரியை அதிகரிக்க, இந்த வரியை செலுத்தாமல் இருப்போர் குறித்த கணக்கெடுக்கும் பணியில், மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
அதன்படி, ஜி.எஸ்.டி., எண் வைத்திருப்போர் அனைவரும், தொழில் வரி செலுத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால், ஜி.எஸ்.டி., எண் வைத்துள்ளோரை அடையாளம் கண்டு, அவர்களிடம் தொழில் வரி வசூலிக்கும் பணியை, மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.
மாநகராட்சி வருவாய் அலுவலர் பானுசந்திரன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்வோர் கட்டாயம் மாநகராட்சிக்கு தொழில் வரி செலுத்த வேண்டும்.
அந்த வகையில், வணிக ரீதியில் தான் பலர், ஜி.எஸ்.டி., எண் பெற்றிருப்பர். அங்கு பணியாற்றும் பணியாளர்கள், வருமானத்திற்கு ஏற்ற வகையில் தொழில் வரி செலுத்த வேண்டும். அதன்படி, சென்னையில் ஜி.எஸ்.டி., எண் வைத்திருப்போர் குறித்த முழு பட்டியலை, ஜி.எஸ்.டி., கவுன்சிலிடம் கேட்டுள்ளோம்.
அதேநேரம், எங்களிடம் இருக்கும் தகவல்கள் அடிப்படையில், 'ஜி.எஸ்.டி., எண்' வைத்திருந்து, தொழில் வரி செலுத்தாமல் இருப்போரிடம் தொழில் வரி செலுத்தும்படி, அறிவுறுத்தி வருகிறோம்.
எத்தனை பேர் செலுத்த வேண்டும்; எவ்வளவு தொகை உள்ளிட்ட விபரங்கள், இப்பணிகள் முழுமை பெற்ற பின் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.