/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் வடிகாலில் 45 இடங்களில் இணைப்பு பணிகள்... முடியவில்லை! 180 வெள்ள அபாய பகுதியை கண்காணிக்க மேயர் உத்தரவு
/
மழைநீர் வடிகாலில் 45 இடங்களில் இணைப்பு பணிகள்... முடியவில்லை! 180 வெள்ள அபாய பகுதியை கண்காணிக்க மேயர் உத்தரவு
மழைநீர் வடிகாலில் 45 இடங்களில் இணைப்பு பணிகள்... முடியவில்லை! 180 வெள்ள அபாய பகுதியை கண்காணிக்க மேயர் உத்தரவு
மழைநீர் வடிகாலில் 45 இடங்களில் இணைப்பு பணிகள்... முடியவில்லை! 180 வெள்ள அபாய பகுதியை கண்காணிக்க மேயர் உத்தரவு
ADDED : அக் 08, 2024 12:07 AM

சென்னை,சென்னை மாநகராட்சியில், மழைநீர் வடிகால்களில் 45 இடங்களில் இணைப்பு பணிகள் முடியாததால், அக்., 15ம் தேதிக்குள் முடிக்க, மண்டல அலுவலர்களுக்கு, மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும், கடந்தாண்டு மழை வெள்ளத்தில் பாதித்த, 180 இடங்களில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, மண்டல வாரியாக மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், கோவளம், கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் விடுபட்ட இடங்களில் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் பணிகள், வண்டல் வடிக்கட்டி தொட்டிகளில் கழிவு அகற்றும் பணி, சாலை வெட்டு பணி, சேதமடைந்த சாலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அத்துடன், கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், மண்டல வாரியாக தகவல் கேட்கப்பட்டது.
இந்த கூட்டம் குறித்து, மாநகராட்சி மேயர் பிரியா பேசியதாவது:
தாழ்வான பகுதிகளில், தேவையான மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மழைக்காலத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக விழும் நிலையில் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள், அதன் கிளைகளை அகற்ற வேண்டும்.
நீர்வளத்துறை மற்றும் ரயில்வே துறையின் பராமரிப்பில் உள்ள, கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணி, 22சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது, 45 இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. 10 அல்லது 15 அடி நீளத்தில் தான் இணைப்பு வழங்க வேண்டும் என்பதால், அக்., 15ம் தேதிக்குள் இணைப்பு வழங்க வேண்டும்.
கடந்த காலங்களில், 180 இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்தது. அந்த இடங்களில், மழைநீர் வடிகால் மற்றும் பாதிப்புக்கான காரணம் கண்டறிந்து தீர்வு காணப்பட்டுள்ளது. எனினும், அப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரயில் பணி நடக்கும் பகுதிகளில், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களாக, 25 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
அங்கு, மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் ஒருங்கிணைந்த சமையற்கூடம் செயல்பட்டு வந்தது. அவற்றால், ஓரிடங்களில் உணவு பற்றாக்குறையும், மற்றொரு இடத்தில் வீணாகியும் வந்தது.
இவற்றை தவிர்க்கும் வகையில், 400 நிவாரண முகாம்களில், அங்கேயே உணவு தயாரித்து வழங்குவதற்கான பொருட்கள் வழங்கப்பட்டு மற்றும் சமையல்காரர்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இதனால், ஒரு முகாமில் 50 பேர் தங்கினால், அவர்களுக்கான உணவு மட்டுமே தயாரித்து வழங்கப்படும்.
அதேபோல், தாழ்வான பகுதிகளுக்கு, 100 மோட்டார்கள், 36 படகுகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து, நிவாரண பணிகளில், 10,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
வடகிழக்கு பருவமழைக்கு மாநகராட்சி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
பொதுமக்கள், மழை தொடர்பான புகார்கள் தெரிவிக்க, '1913' என்ற தொலைபேசி எண்ணில், 150 கூடுதல் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், 94455 51913 என்ற வாட்ஸாப் எண்ணிலும் புகார் மற்றும் தகவல்கள் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.