/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கவுன்சிலரின் பேச்சில் வெட்ட வெளிச்சமான தி.மு.க., உட்கட்சி பூசல் திருவொற்றியூர் மண்டல கூட்டத்தில் பரபரப்பு
/
கவுன்சிலரின் பேச்சில் வெட்ட வெளிச்சமான தி.மு.க., உட்கட்சி பூசல் திருவொற்றியூர் மண்டல கூட்டத்தில் பரபரப்பு
கவுன்சிலரின் பேச்சில் வெட்ட வெளிச்சமான தி.மு.க., உட்கட்சி பூசல் திருவொற்றியூர் மண்டல கூட்டத்தில் பரபரப்பு
கவுன்சிலரின் பேச்சில் வெட்ட வெளிச்சமான தி.மு.க., உட்கட்சி பூசல் திருவொற்றியூர் மண்டல கூட்டத்தில் பரபரப்பு
ADDED : பிப் 20, 2024 01:08 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டல கூட்டத்தில், கவுன்சிலரின் பேச்சில் தி.மு.க., உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமானது.
சென்னை, திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தலைவர் தனியரசு தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், 17 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வெளிநடப்பு
இந்த நிலையில், மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன், திட்டப் பணிகள் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விவரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட தி.மு.க., 1வது வார்டு கவுன்சிலர் சிவகுமார், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தை காரணம் காட்டி, பல பணிகள் தள்ளிப் போடப்படுகின்றன.
அப்படியானால், திருச்சினாங்குப்பத்தில், மிகப்பெரிய கட்டடங்கள் மட்டும் வந்தது எப்படி என, கேள்வி எழுப்பினார்.
மேலும், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம், 1986 உட்பிரிவு 6ன் படி, மீனவர்களுக்கு விதிகளை தளர்த்தலாம் என, தொடர்ச்சியாக பேசினார்.
இதனால், ஆத்திரமடைந்த உதவி கமிஷனர், திடீரென கூட்டத்தை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து, செயற்பொறியாளர் சகுபர் ஹூசைன் தலைமையில் அனைத்து மாநகராட்சி அதிகாரிகளும் வெளியேறினர்.
இதனால், மண்டல குழு கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, மண்டல குழு தலைவர் சமரசப்படுத்தி, கூட்டத்திற்கு திரும்பச் செய்தார்.
அ.தி.மு.க., 7வது வார்டு கவுன்சிலர், கார்த்தி பேசுகையில், ''என் வார்டில் கிராம சபை கூட்டங்களில், மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்பதில்லை.
குடிநீர் மஞ்சள் நிறத்தில் வினியோகமாகிறது. நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, போதை ஆசாமிகளால் அச்சுறுத்தல் உள்ளது,'' என்றார்.
அன்றும் இன்றும்
கூட்டத்தில், 1வது வார்டு கவுன்சிலரின் பேச்சு மற்றும் கேள்விகளுக்கு, அதிகாரிகள் அளித்த பதில் குறித்து, 12வது வார்டு கவுன்சிலர் கவி.கணேசன் பேசினார். அப்போது, மண்டலக்குழு தலைவர் தனியரசுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
கவுன்சிலர் கவி.கணேசன், இது போன்ற விவாதங்களால், 'தி.மு.க.,வினர் மோதல்' என, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
இதனால், அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுகிறது. 'ஊடகங்களை வெளியேற சொல்லுங்கள்' எனக்கூறி, மன்றத்தை விட்டு திடீரென வெளியேறினார். இதற்கு முன், 'மன்றத்தில் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டும்' என, இவர் தான் முதலில் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரியாதை கொடுங்கள்
அதிகாரிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதேபோல, திட்டப்பணிகள், பூமி பூஜை உள்ளிட்டவை குறித்து, சம்பந்தப்பட்ட பகுதி கவுன்சிலர்களுக்கு, முறையான தகவல்களை அதிகாரிகள் தர வேண்டும். தியாகராயபுரம் குடிநீர் தொட்டிக்கு ஏற வழியில்லை. பராமரிப்பு பணிகள் எப்படி மேற்கொள்வது.
தனியரசு,
மண்டல குழு தலைவர், திருவொற்றியூர்.
கமிஷனர் சொல்வது என்ன?
மண்டல குழு கூட்டங்களில், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பாக, மண்டல நிர்வாகங்கள் இடையே முரண்பட்ட கருத்துகள் எழுகின்றன.
இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபோது, ''இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும்,'' எனக் கூறினார்.
ரூ. 15 கோடியில் பணிகள்
திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை சுட்டி காட்டி, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், அந்த பணிகளை மேற் கொள்ளலாம் என கூற வந்தேன். அதற்குள், கவுன்சிலர் குறுக்கிட்டார். எண்ணுாரில் காற்று மாசு தடுக்க வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
நவேந்திரன்,
உதவி கமிஷனர், திருவொற்றியூர் மண்டலம்

