/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வாரியம் அலட்சிய பணி கவுன்சிலர்கள் கடும் குற்றச்சாட்டு
/
குடிநீர் வாரியம் அலட்சிய பணி கவுன்சிலர்கள் கடும் குற்றச்சாட்டு
குடிநீர் வாரியம் அலட்சிய பணி கவுன்சிலர்கள் கடும் குற்றச்சாட்டு
குடிநீர் வாரியம் அலட்சிய பணி கவுன்சிலர்கள் கடும் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 13, 2025 12:19 AM
ஆலந்துார், ஆலந்துார் மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. மண்டல உதவிக் கமிஷனர் முருகதாஸ், செயற்பொறியாளர்கள், அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
தேவி, தி.மு.க., 164வது வார்டு: ஒரு மாதத்திற்கு மேலாக, மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில் நேரு காலனி, 9, 16வது தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படவில்லை.
பிருந்தாஸ்ரீ, தி.மு.க., 160வது வார்டு: 'அம்மா' குடிநீர் மையம், சரிசெய்யாமலே இருக்கிறது. ஜி.எஸ்.டி., சாலை மழைநீர் வடிகால்வாயில் சகதி நிறைந்து கிடக்கிறது. வார்டில் இருந்து வெளியேறும் மழைநீர் இந்த கால்வாயில் செல்லும் என்பதால், முன்னெச்சரிக்கையாக சகதியை அகற்ற வேண்டும். வார்டுக்கு ஒதுக்கப்பட்ட மின்மாற்றியை உடனடியாக பொறுத்தி, மின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
பாரதி, தி.மு.க., 158வது வார்டு: உடற்பயிற்சி கூடப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கணபதிபுரம் காலனி சாலையை சீரமைக்கவேண்டும்.
அமுதப்பிரியா, தி.மு.க., 159வது வார்டு: மீனம்பாக்கம், ராஜிவ்காந்தி நகர், திருவள்ளுவர் நகரில் மின் பிரச்னை நிலவுகிறது. புதிதாக மின்மாற்றி பொருத்தி, மின் வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
துர்காதேவி, தி.மு.க., 167வது வார்டு: நங்கநல்லுார், 41 முதல் 44வது தெருக்களில் பாதாள சாக்கடை பிரதான குழாய் மாற்றப்பட்டுவிட்டது. அச்சாலைகள் உடனடியாக சீரமைக்க வேண்டும். 46வது தெருவில் மழைநீர் வடிகால்வாய் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
பூங்கொடி ஜெகதீசன், தி.மு.க., 163வது வார்டு: மழைநீர் கால்வாய் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். நியூ காலனி சுடுகாட்டை சீரமைக்க வேண்டும்.
செல்வேந்திரன், தி.மு.க., 156வது வார்டு: பருவமழை நீர் செல்வதற்கு ஏற்ப, மணப்பாக்கம் கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும். நந்தகோபால்ராஜா தெருவில் சீரமைக்கப்பட்ட குளம், வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்துள்ளதால் இணைப்பு பணியை விரைவில் துவக்க வேண்டும்.
சாலமோன், தி.மு.க., 162வது வார்டு: மாரீசன் தெருக்கள், நோபல் தெரு, ஹோல்மேன் தெரு ஆகியவற்றில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.
மண்டலக்குழு தலைவர் சந்திரன் பேசியதாவது:
ஒவ்வொரு மாதமும் குடிநீர் வாரியத்தின் மீது தான் புகார்கள் அதிகம் வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு துறை அலுவலர்களும், அந்தந்த வார்டு கவுன்சிலருடன் இணைந்து, தினமும் வார்டில் வலம் வந்து மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தெருவிளக்கு, சாலை சீரமைப்பு என, 26 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.