/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.டி.ஆர்., வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி: தம்பதி கைது
/
டி.டி.ஆர்., வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி: தம்பதி கைது
டி.டி.ஆர்., வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி: தம்பதி கைது
டி.டி.ஆர்., வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி: தம்பதி கைது
ADDED : நவ 22, 2025 03:58 AM

ஆவடி: தெற்கு ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாக கூறி, வாலிபரிடம் 28 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருமுல்லைவாயில், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார், 35. தனியார் நிறுவன ஊழியர். கடந்த 2022ல், அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த கோபிநாத், 43, அவரின் மனைவி சிவகாமி, 41, ஆகியோர், தங்களுக்கு ரயில்வே துறையில் உயர் அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் வாயிலாக தெற்கு ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர்.
அதற்காக, அஜித்குமாரிடம் இருந்து, ஆன்லைனில் நான்கு தவணையில், 28 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டனர். பின், இரண்டு ஆண்டுகளாக வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தனர்.
அஜித்குமார், தொடர்ந்து வேலை குறித்து கேட்டதால், 2024ம் ஆண்டு ஜூன் மாதம், போலியான பணி தேர்வுக்கான ஆணை ஒன்றை தயார் செய்து, அஜித்குமாருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளனர்.
மேலும், டி.டி.ஆர்., வேலைக்கு சீருடை, பேட்ஜ், கருப்பு பேக் மற்றும் டேப் உள்ளிட்டவை கொடுத்துள்ளனர். சந்தேகமடைந்த அஜித்குமார், இது குறித்து தெற்கு ரயில்வே அலுவலகத்தில் விசாரித்த போது, அது போலியான பணி ஆணை என தெரிந்தது.
அதன்பின், அஜித்குமார் பணத்தை திருப்பி கேட்ட போது, கோபிநாத், சிவகாமி தம்பதியர், திடீரென வீட்டை காலி செய்து தலைமறைவாகினர். அதிர்ச்சி அடைந்த அஜித்குமார், ஆவடி மத்திய குற்றப்பிரிவில், கடந்த ஏப்., மாதம் புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார், வாலாஜாபாத்தில் கோபிநாத், சிவகாமியை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

