/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவிக்கு கணவரின் இறப்பு பலன் ரூ.92 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவு
/
மனைவிக்கு கணவரின் இறப்பு பலன் ரூ.92 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவு
மனைவிக்கு கணவரின் இறப்பு பலன் ரூ.92 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவு
மனைவிக்கு கணவரின் இறப்பு பலன் ரூ.92 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவு
ADDED : மே 25, 2025 12:24 AM
சென்னை :இறப்பு பலன்கள் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தது சேவை குறைபாடு எனக் கூறி, மனைவிக்கு கணவரின் ஆயுள் காப்பீட்டின் இறப்பு பலன் தொகையான, 92 லட்சம் ரூபாயை வழங்க, தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடுங்கையூரைச் சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனு:
மாதவரத்தில், 'எஸ்.எம்.எப்.ஜி., கிர்ஹ' என்ற தனியார் நிறுவனத்தில், கணவர் குணசேகர் பணிபுரிந்தார். அப்போது, டாடா ஏ.ஐ.ஜி., காப்பீட்டு நிறுவனத்தில், 'சம்பூர்ண ரக் ஷா' என்ற ஆயுள் காப்பீட்டு திட்டத்தில், கடந்த 2020 ஜூன் 13ல் சேர்ந்தார். திட்ட முதிர்வு தொகை, 50 லட்சம் ரூபாய். 'நாமினி'யாக ஆயுள் காப்பீடு திட்டத்தில் என்னை சேர்த்திருந்தார்.
குடும்பத்தில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியால், தன் கணவர் கடந்தாண்டு ஜன., 17ல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, கடந்தாண்டு பிப்., 21ல் ஆயுள் காப்பீடு திட்டத்தின் இறப்பு பலன் தொகை, 92 லட்சத்து 84,000 ரூபாய் கோரி விண்ணப்பம் செய்தேன்.
காப்பீடு திட்டத்தில், 'ரிஸ்க் கவரேஜ்' துவங்கிய நாளில் இருந்து அல்லது காப்பீடு புதுப்பிக்கப்பட்ட நாளிலிருந்து, 12 மாதங்களுக்குள் தற்கொலை செய்ததால், மொத்த காப்பீட்டு தொகையை பெறும் தகுதியை இழக்கிறார்.
காப்பீடு செய்தவர் இறந்த தேதி வரை செலுத்திய மொத்த காப்பீடு தொகை அல்லது இறந்த தேதியில் 'சரண்டர்' செய்த காப்பீடு தொகை, இவற்றில் எது அதிகமோ, அதை 'நாமினி' பெறலாம் எனக்கூறி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அதன்படி, 95,000 ரூபாய் மட்டுமே பெற தகுதி உள்ளது என, காப்பீடு நிறுவனம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
காப்பீடு குறைதீர் ஆணையத்திடம் அளித்த புகார் மனுவும் நிராகரிக்கப்பட்டது.
எனவே, இறப்பு பலன் தொகை, 92 லட்சத்து 84,000 ரூபாயுடன், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மொத்தமுள்ள நான்கு ஆண்டுகளில், 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு சலுகைக் காலத்தைத் தாண்டி வட்டியுடன், காப்பீடுதாரர் பிரீமியங்களைச் செலுத்தியுள்ளார்.
இறந்த குணசேகர் காப்பீட்டை புதுப்பிக்கும்போது, காப்பீடு நிறுவன வழிகாட்டுதல்படி, அவரிடம் இருந்து உரிய மருத்துவ சான்றிதழ் போன்ற ஆவணங்கள் எதையும் கோரவில்லை.
காப்பீடு நிறுவனம், தங்கள் வசதிக்கு ஏற்ப விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தன்னிச்சையாக மாற்றி, புகார்தாரருக்கு இறப்பு சலுகைகளை நிராகரித்துள்ளது.
இது, காப்பீடு நிறுவனத்தின் சேவை குறைபாடு. எனவே, காப்பீடு இறப்பு பலன், 92 லட்சத்து 84,000 ஆயிரம் ரூபாயை, 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும்.
சேவை குறைபாடு, மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவுக்கு என, மொத்தம் 30,000 ரூபாயை, மனுதாரருக்கு காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.