/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துறைமுகத்தில் கிரேன் கவிழ்ந்து விபத்து
/
துறைமுகத்தில் கிரேன் கவிழ்ந்து விபத்து
ADDED : செப் 25, 2024 12:25 AM

ராயபுரம், சென்னை துறைமுகத்தில் தனியார் நிர்வகித்து வரும் சி.ஐ.டி.பி.எல்., சரக்கு பெட்டக முனையம் உள்ளது. இந்த துறைமுகத்தை சார்ந்து, சென்னையை ஒட்டி, 40க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொதுத்துறை சரக்கு பெட்டக நிலையங்கள் அமைந்துள்ளன.
துறைமுகத்தில் உள்ள சி.ஐ.டி.பி.எல்., சரக்கு பெட்டக முனையங்கள் மூலம், ஆண்டுக்கு 13 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று காலை, சென்னை துறைமுகத்தில், சி.ஐ.டி.பி.எல்., தனியார் சரக்கு பெட்டக முனையத்தில், கல்மார் கிரேன் மூலம், பெட்டகங்கள் கையாளப்பட்டன.
இதில், அதிக எடையுள்ள சரக்கு பெட்டகத்தை துாக்க முடியாமல், கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஊழியர்கள் யாரும் அருகில் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
பயிற்சி ஆபரேட்டர்கள் அனுபவமின்றி பணியில் ஈடுபடும் போது விபத்துகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலர் சுரேஷ்பாபு கூறியதாவது:
ஏற்கனவே கடந்த ஜூலை 13ல், சென்னை காட்டுபள்ளி துறைமுகத்தில், கன்டெய்னர் பெட்டி விழுந்ததில், கீழே வாகனத்தில் இருந்த ஓட்டுனர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
சி.ஐ.டி.பி.எல்., தனியார் முனையத்தில், சரக்கு பெட்டகங்களை கிரேன் மூலம் கையாள, பயிற்சி பெறாதவர்கள், குறைந்த சம்பளத்தில் வேலைக்கு பணியமர்த்தப்படுகின்றனர். இதனால், தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. அத்துடன் நேர விரயமும் ஏற்படுகிறது.
திருவொற்றியூர், மணலி புதுநகர், ஆண்டாள்குப்பம், பட்டமந்திரி என 16 கி.மீ., துாரத்திற்கு கன்டெய்னர் லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன.
சென்னை துறைமுக நிர்வாகம், பெரிய விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், அனுபவம் வாய்ந்த கிரேன் ஆபரேட்டர்களை பணியில் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.