ADDED : செப் 20, 2026 02:04 AM

சிறுமியிடம் சில்மிஷம் செய்தவருக்கு தர்ம அடி
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை, டோபிகானா பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 50. நேற்று முன்தினம் இரவு, கோதமேடு பகுதியில் கடைக்கு சென்ற 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி சத்தம் போட்டதும், அக்கம் பக்கத்தினர், ஜெயச்சந்திரனை பிடித்து தர்ம அடி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். சைதாப்பேட்டை மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.
பெண்ணை கத்தியால் தாக்கியவருக்கு 'காப்பு'
அரும்பாக்கம்: சூளைமேடு, சமயபுரத்து அம்மன் கோவில் தெருவில், 33 வயது பெண் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார். அதே பகுதியைச் சேர்ந்த தீனதயாளன், 33, என்பவர், பெண்ணை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்பெண் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த அவர், கத்தியால் தாக்கி தப்பினார். காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் அடிப்படையில் விசாரித்த அரும்பாக்கம் போலீசார், தீனதயாளனை கைது செய்தனர். விசாரணையில், பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பின், பணம் கேட்டு தாக்கியது தெரியவந்தது.
ஆட்டோவை திருடி விற்ற வாலிபருக்கு கம்பி
கோயம்பேடு: கோயம்பேடு, சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் முத்துகுமரன், 42, லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். உடல்நிலை சரியில்லாததால், ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு திண்டிவனம் சென்றார். திரும்பி வந்தபோது ஆட்டோ திருடு போயிருந்தது. போலீசார் விசாரணையில், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன், 26, லோடு ஆட்டோவை திருடி, வேறு இடத்தில் விற்று கிடைத்த பணத்தில் பயணியர் ஆட்டோ வாங்கி சென்னையில் ஓட்டி வந்தது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே இரண்டு குற்ற வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
கடை ஷட்டரை உடைத்து ரூ.5,000 'அபேஸ்'
முடிச்சூர்: தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், ஏ.என்., காலனியில் மளிகைக் கடை இயங்கி வருகிறது. இக்கடையை வழக்கம் போல், நேற்று முன்தினம் பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை திறக்க வந்தபோது, ஷட்டர் உடைக்கப்பட்டு 5,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. உரிமையாளர் புகார்படி, பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மெரினாவில் முதியவர் மர்ம மரணம்
மெரினா: மெரினா கலங்கரை விளக்கம் பின்புறம், நேற்று மதியம் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார்; எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.
வீட்டு கதவை உடைத்து 7 சவரன் நகை திருட்டு
பம்மல்: பம்மல், அகத்தீஸ்வரர் கோவில் முதல் தெருவைச் சேர்ந்த ரகுராமன், நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றார். மாலை திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 7 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
'காஸ்' சிலிண்டர் வெடித்து தீ விபத்து
எம்.ஜி.ஆர். நகர்: எம்.ஜி.ஆர்., நகர் அய்யாவு பிரதான தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 40. நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்து திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் மற்றும் அசோக் நகர் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இரும்பு பொருட்கள் திருட முயன்ற இருவர் கைது
வானகரம்: மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலை கட்டுமானப் பணிக்காக, மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் இரும்பு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் அதிகாலை, டியோ பைக்கில் வந்த மூவர் அவற்றை திருட முயன்றபோது காவலாளிகள் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களில், சின்ன போரூரைச் சேர்ந்த விக்னேஷ், 22, பெரம்பூரைச் சேர்ந்த ராகுல், 20, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து டியோ இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
கமிஷன் தகராறில் வெட்டு; நால்வர் சிக்கினர்
ராஜமங்கலம்: வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகா ந்த், 28; கபடி வீரர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் தம்பியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் பணம் கேட்டு கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். ராஜமங்கலம் போலீசார் விசாரணையில், நில விற்பனை கமிஷன் பிரச்னையில் தாக்குதல் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஆகாஷ், 20, வருண், 20, சியாம்ராஜ், 19, நிதிஷ், 20, ஆகிய நால்வரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
