தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர் 1

கிரைம் கார்னர் 1

கிரைம் கார்னர் 1


ADDED : செப் 26, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

2 டன் மிளகு மோசடி செய்த பெண் கைது

பெரம்பூர்: கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் மன்சூர், 52; மிளகு வியாபாரி. கடந்த மாதம் 21ம் தேதி, ‘தளிர்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் பெரம்பூரைச் சேர்ந்த வைஷ்ணவி, 29, என்பவர் கேட்டதன்படி, 16.48 லட்ச மதிப்பிலான 2 டன் மிளகு டெலிவரி செய்துள்ளார். ஆனால், 3 லட்ச ரூபாய் மட்டும் வைஷ்ணவி கொடுத்துள்ளார். ஏமாற்றப்பட்ட மன்சூர் அளித்த புகாரையடுத்து, விசாரித்த செம்பியம் போலீசார், வைஷ்ணவி மற்றும் தளிர் நிறுவன மேலாளரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தேசிங்கு ராஜா, 32 ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

––––––––––––

ஸ்கூட்டர் திருடனுக்கு ‘காப்பு’

கோட்டூர்புரம்: தரமணி, களிக்குன்றத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 34. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது ‘ஹோண்டா ஆக்டிவா’ ஸ்கூட்டர், கடந்த 23ம் தேதி இரவு திருட்டு போனது. விசாரித்த கோட்டூர்புரம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட தரமணியைச் சேர்ந்த கமலக்கண்ணன், 46 என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்து, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.

–––––––––––

மொபைல் போன் பறித்தவர் பிடிபட்டார்

நுங்கம்பாக்கம்: மாங்காடைச் சேர்ந்த 23 வயது பெண், தோழியின் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, கடந்த 19ம் தேதி நுங்கம்பாக்கத்திற்கு வந்தார். நுங்கம்பாக்கம் கல்லுாரி சாலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது, பைக்கில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்து தப்பினர். நுங்கம்பாக்கம் போலீசாரின் விசாரணையில், சூளையைச் சேர்ந்த அருண்குமார், 27 என்பவர், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், மொபைல் போனை விற்பனை செய்து வைத்திருந்த, 10,490 ரூபாயை பறிமுதல் செய்தனர்; கூட்டாளியை தேடி வருகின்றனர்.

–––––––––––

வாலிபருக்கு கத்திக்குத்து: நண்பருக்கு சிறை

அண்ணா நகர்: அண்ணா நகர், எம்.ஜி.ஆர்., காலனியைச் சேர்ந்த கொத்தனார்கள் விஜயன், 26, ரவிகுமார், 40. நண்பர்களான இருவரும், கடந்த 23ம் தேதி இரவு வீட்டின் அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது; அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர். மறுநாளான 24ம் தேதி மாலை விஜயன் வீட்டின் அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த ரவிகுமார், ஆத்திரமடங்காமல், விஜயனை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி தப்பினார். விசாரித்த அண்ணா நகர் போலீசார், ரவிகுமாரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

–––––––––––

ரயில் நிலையத்தில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவொற்றியூர்: கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், நேற்று முன்தினம் மாலை, திருவொற்றியூர், விம்கோ நகர், அத்திப்பட்டு, கொருக்குப்பேட்டை ரயில்வே நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவிற்கு கடத்துவதற்காக, நடைமேடையில் பயணியரின் இருக்கைக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த, தலா, 20 கிலோ கொண்ட 52 மூட்டைகளில் இருந்து, 1.1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அவை, குடிமைப் பொருள் மற்றும் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

------–––––––––––

ரயில் பயணியை தாக்கி போன் பறித்தவர் கைது

திருவொற்றியூர்: எர்ணாவூரைச் சேர்ந்தவர் முத்துகுமரன், 38; எல்.ஐ.சி., முகவர். கடந்த 12ம் தேதி மின்சார ரயிலில் விம்கோ நகர் ரயில் நிலையம் வந்து இறங்கி, தண்டவாளம் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, இருவர் அவரை கல்லால் தாக்கி, இரண்டு மொபைல்போன்களை பறித்துச் சென்றனர். விசாரித்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விக்னேஸ்வரன், 21, என்பவரை கைது செய்து, ஒரு மொபைல்போனை பறிமுதல் செய்தனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

––––––––––––––

கடைக்காரரை தாக்கி பணம் பறிப்பு

கண்ணகி நகர்: காரப்பாக்கம், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஜேசுராஜ், 38. இவர், அதே பகுதியில் காயலான் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், காரப்பாக்கம், எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்த உதயசங்கர், 33, என்பவர், கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். தர மறுத்ததால், ஜேசுராஜை சரமாரியாக தாக்கி, பாக்கெட்டில் இருந்த, 7,000 ரூபாயை பறித்து சென்றார். விசாரித்த கண்ணகி நகர் போலீசார், நேற்று உதயசங்கரை கைது செய்தனர்.

–––––––––––––––

போலீசுக்கு ‘டிமிக்கி’ கொடுத்தவர் சிக்கினார்

எம்.ஜி.ஆர்., நகர்: எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலைய எல்லையில், 2021ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நவீன், 25, என்பவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற பிணையில் வெளியே வந்த நவீன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, நேற்று முன்தினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அவரை நேற்று கைது செய்த எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

–––––––––––––––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us