ADDED : ஏப் 22, 2026 10:10 PM
விருகம்பாக்கம்: விருகம்பாக்கம், நாராயணசாமி தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 30. இவருக்கும், இவரது நண்பர் ஹரிஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
கடந்த 20ல், விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில், டீ கடையில் நின்றிருந்த விக்னேஷிடம், ஹரிஷ், 23, உட்பட ஆறு பேர் தகராறு செய்து, கத்தியால் வெட்டி தப்பிச் சென்றனர்.
விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து, ஹரிஷ், திருநாவுக்கரசு, 25, சின்னதம்பி, 25, ஆகிய மூன்று பேரை, நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
--
போலீஸ் எனக்கூறி
பணம் பறிக்க முயற்சி
ஐஸ்ஹவுஸ்: திருவல்லிக்கேணி, ஓவியம் தெருவைச் சேர்ந்தவர் சாத்தையா, 46; டாக்டர் பெசன்ட் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று, இவரது கடைக்கு வந்த இரண்டு பேர், போலீஸ் என அறிமுகமாகி, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக கூறி, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.
சந்தேகமடைந்த கடைக்காரர், அவர்களுக்கு தெரியாமல், ஐஸ்ஹவுஸ் போலீசில் தெரிவித்தனர். பிடிபட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், 45, ரெட்டேரி சரத்குமார், 33, என்பது தெரியவந்தது. இருவரும் 'சீர்மிகு காவலர்கள்' என்ற பத்திரிகையாளர் அடையாள அட்டை வைத்திருந்தது தெரியவந்தது. இருவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
--
'டான்ஸ்' ஆடியதில் தகராறு
புளியந்தோப்பில் ஒருவர் கைது
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கே.பி., பார்க் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 40. இவரது எதிர் வீட்டில் வசித்த வினோத் என்பவர், உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இவரது இறப்பு காரியத்திற்கு, வீட்டு முன் ராஜேந்திரன் என்பவர் மது போதையில் டான்ஸ் ஆடியுள்ளார்.
அப்போது, மேளம் அடிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ‛வீடு கொளுத்தி' சூர்யா என்ற கதிரவன், 35, என்பவரும் டான்ஸ் ஆடியுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கதிரவன், கையில் மாட்டியிருந்த இரும்பு காப்பால், ராஜேந்திரனை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்படி, கதிரவனை பேசின்பாலம் போலீசார் கைது செய்தனர்.
