ADDED : ஜன 08, 2026 05:48 AM

7 கிலோ கஞ்சா பறிமுதல்
பூந்தமல்லி: சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி வெளியூர் பேருந்துகள் நிறுத்தம் பகுதியில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சுற்றித்திரிந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆதம் சிங், 22, என்பவரை பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் 7 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஆதம் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போதை மாத்திரை விற்ற நால்வர் கைது
வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் எதிரே, கறிக்கடையில், நேற்று முன்தினம் இரவு போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கு போதை மாத்திரைகள் சிக்கின. விசாரணையில், கடை உரிமையாளர் பாசில் முகமது, 30, கடை ஊழியர்களான கொடுங்கையூரைச் சேர்ந்த அமீர் உசேன், 19, பீகாரைச் சேர்ந்த லட்லா, 20, ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவரான பெரோஸ், 18, ஆகியோர், கல்லுாரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்று வந்தது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.
அதேபோல், நொச்சிக்குப்பம் கடற்கரையில், 150 போதை மாத்திரைகளுடன் உலவிய, மயிலாப்பூரைச் சேர்ந்த துலுக்காணம், 24, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முகமது சுபான், 27, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
'பங்க்' ஊழியரின் போன் பறிப்பு
புதுவண்ணாரப்பேட்டை: பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும், எண்ணுார், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆனந்தன், 25, என்பவர், நேற்று அதிகாலை பைக்கில் சென்றபோது, மர்மநபர் வழிமறித்து, அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்து தப்பினார்.
புகாரின்படி, புதுவண்ணாரப்பேட்டை போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய, திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்த பரத், 32, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
தலைமறைவு குற்றவாளி கைது
சென்னை: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஜியருல் ஹக், 32. இவர் வில்லிவாக்கத்தில் கட்டட பணியில் இருந்தபோது, கடந்த 11ம் தேதி மர்மநபர்கள் இருவர், கத்தி முனையில், 500 ரூபாயை பறித்து தப்பினர்.
வழக்குப்பதிவு செய்த வில்லிவாக்கம் போலீசார், 12ம் தேதி சூர்யா, 25, என்ற பழைய குற்றவாளியை கைது செய்தனர். தலைமறைவான நாகலிங்கம், 27, என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அவரை போலீசார் கைது செய்த னர்.
ஏ.டி.எம்., மைய கதவு உடைப்பு
மடிப்பாக்கம்: உள்ளகரத்தில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தின் கண்ணாடி கதவை, நேற்று முன்தினம் இரவு மர்மநபர் உடைத்து சென்றதாக, வங்கி மேலாளர் உமேஷ் பிரசாத் என்பவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், கண்ணாடியை உடைத்த, ஒட்டியம்பாக்கம், ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்த சந்திரசேகர், 34, என்பவரை, நேற்று பிடித்து விசாரித்தனர். அதில், குடி போதையில் ஏ.டி.எம்., கண்ணாடி கதவை உடைத்தது தெரியவந்தது. பின், சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர்.

