ADDED : மார் 28, 2026 05:12 AM
சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் கைது
எம்.கே.பி., நகர்: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர் நேற்று முன்தினம் இரவு, டியூஷன் முடிந்து வீட்டிற்கு நடந்த சென்றபோது, அவ்வழியே வந்த மர்ம நபர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். விசாரித்த எம்.கே.பி.,நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மணலியைச் சேர்ந்த முகமது நுாராலம், 28, என்பவரை 'போக்சோ' சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.
புளியந்தோப்பு வழிப்பறி திருடனுக்கு 'காப்பு'
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார், 30. இவர், நேற்று கன்னிகாபுரம் விளையாட்டு திடல் அருகே சென்றபோது, சிலர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர். புளியந்தோப்பு போலீசாரின் விசாரணையில், புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த இளம் பரிதி என்கிற டைகர் ராஜாத்தி, 38 என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து போலீசார், சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே 50 குற்ற வழக்குகள் உள்ளன.
வீடு புகுந்து பெண்ணை தாக்கியவர் கைது
பெரம்பூர்: பெரம்பூரைச் சேர்ந்த 31 வயது பெண்ணுக்கு, திருமணமாகி குழந்தை ஏதும் இல்லை. இவரது கணவர் வழக்கறிஞரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். திருமணத்திற்கு முன் பள்ளியில் பயிலும் போதிருந்தே காஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூரைச் சேர்ந்த மோகன், 38 என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். சமீபகாலமாக மோகனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். ஆத்திரமடைந்த மோகன் கடந்த 21ம் தேதி மோகன் வீடு புகுந்து, அப்பெண்ணை தாக்கியுள்ளார்; வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தி சென்றார். விசாரித்த செம்பியம் போலீசார், உத்திரமேரூரில் பதுங்கி இருந்த மோகனை நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
போலீஸ்காரரை தாக்கிய பா.ஜ., நிர்வாகி
பெரம்பூர்: பெரம்பூரைச் சேர்ந்தவர் வசந்தகுமார், 38. போலீஸ்காரரான இவர், தற்போது, சென்னை போலீஸ் கமிஷனரகத்தில் பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து, நெல்வயல் சாலையில், ஸ்டேஷனரி கடை அருகே இருவர் நடைபாதையில் மது அருந்தி கொண்டிருந்தனர். இதை வசந்தகுமார் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாய் தகராறில், இருவரும் வசந்தகுமாரை தாக்கி விட்டு சென்றனர். காயமடைந்த வசந்தகுமார் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். செம்பியம் போலீசார், திரு.வி.க., நகரைச் சேர்ந்த பா.ஜ., வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலர் மணிகண்டன், 40 என்பவரை கைது செய்தனர்.
